📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 13, 2026 06:35 PM

நாளை விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு

நாளை விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு

சென்னை, செப். 13–நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளன.நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன.சென்னையில் 1500 சிலைகள்சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன.கமிஷனர் ஆலோசனைஇது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது. நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்பு ணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும் விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.பூக்கள் விலை கிடுகிடு உயர்வுமதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ, இன்று கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கும், செண்டு பூ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் ரோஜா கிலோ ரூ.220-க்கும், நாட்டு ரோஜா கிலோ ரூ.300-க்கும், பிச்சி ரூ.1000, முல்லை ரூ.900, செவ்வந்தி ரூ.250, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.1000, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.350 விற்பனையாகிறது.