நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது
நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது - திருமாவளவன் பதிலடி
திமுக கூட்டணியில் நாங்கள் மட்டுமல்ல, இடம்பெற்றிருந்த எந்த கட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போய்விட்டது என திருமாவளவன் தெரிவித்தார்.
Published : September 27, 2026 at 12:06 PM IST
சென்னை: யார் என்ன சொன்னாலும், அதை பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால், நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை அடையாறு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.எம்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், விடுதலைக் கலை இலக்கிய பேரவையின் சார்பில் முப்பெரும் விழா நேற்று (செப்.26) நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, 2026 எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள், சிறுகதை, இலக்கிய விருது வழங்கப்பட்டது.
அப்போது, மேடையில் பேசிய திருமாவளவன், “திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவோ, தொழில் அதிபராகவோ இல்லை. வி.சி.க-வின் இருப்பு, தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவைப்படுகிறது. நம்முடைய அரசியல் தேவைப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலில் நாம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம், பல அரசியல் கட்சிகளின் நிலைபாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கூட்டணி கணக்குகளை மாற்றியிருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சனாதன எதிர்ப்பு தமிழ்நாட்டில் வலுத்துள்ளது. இது வி.சி.க-வின் அரசியலால் நிகழ்ந்த விளைச்சல்.
பா.ஜ.க-வின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காததற்கு வி.சி.க.வின் பங்களிப்பும் இருக்கிறது. இதை யாரும் சொல்லமாட்டார்கள். நமக்கு அந்த தெளிவு தேவை. தேர்தல் அரசியலில் எடுக்கும் நிலைபாடை வைத்து ஒரு இயக்கத்தை தீர்மானித்து விடக் கூடாது.
'எத்தனை நாட்களுக்கு ஒரு போர் வாள் உறைந்தே கிடக்கும். அது வெளியே வந்துவிட்டது' என்று கவிஞர் சொன்னார். நாம் இன்னும் அப்படி வெளியே வரவில்லை. காலம் சிறு கணக்குகளை போடுகிறது. யாரும் எதிர்பாராத கணக்கு. இந்த பழியை காலத்தின் மீதுதான் போட முடியும். யார் மீதும் தனிப்பட்ட முறையில் பழி சுமத்த விரும்பவில்லை.
பதவிக்காகவோ, பரிசுக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ நாங்கள் அணி மாறவில்லை. அப்படி அந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எவன் என்ன சொன்னாலும், அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் இருக்கிறது.
தி.மு.க-வை விட்டு வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை பலர் தேடுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக நாங்கள் இந்த அணிக்கு வரவில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் மட்டுமல்ல, இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு யார் பொறுப்பு, காரணம் என அவர்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது என்பது வி.சி.க.வின் கனவு. திமுக தலைமையிலான கூட்டணியில் அது அமையும் என்று நினைத்தேன். காலம் வேறு கணக்குகளை போட்டு, நம் கனவை நினைவாக்கியது. இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய த.வெ.க துணை பொதுச் செயலாளர் வைகைச் செல்வன், “திருமாவளவன் ஒரு இயக்கத்தினுடைய அடையாளம், முகவரி. அதையும் தாண்டி ஒரு சமூகத்தினுடைய குரலாக உள்ளார். அரசியல் பயணத்தின் பிரதிநிதி. அம்பேத்கர் சிந்தனையை தொடர்ந்து பேசி வருகிறார். திருமாவளவன் அரசியலுக்கு வந்து படித்தவர் அல்ல, படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். வலியோடு வந்ததால்தான் அடுத்தவருடைய வலியையும் புரிந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய பேச்சும், அரசிலும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது, ஒவ்வொரு மனிதனுடைய பிரச்சினையாகும். சமூகம், அனுபவம், கல்வி, இயக்கம், போராட்டம், அரசியல் இந்த ஐந்தும் சேர்ந்துதான் ஒரு அரசியல் தலைவரை உருவாக்குகிறது என்று சொன்னால் அவர்தான் திருமாவளவன். அவரை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், ஏன் விமர்சனம் கூட செய்யலாம். ஆனால் அவரை தாண்டிப் போக முடியாது” என புகழாரம் சூட்டினார்.