📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 15, 2026 01:33 AM

நான் அழவில்லை என்பதால் என்னை விமர்சிப்பீர்களா? பாடகி ஜானகியின் பேத்தி ஆதங்கம்

நான் அழவில்லை என்பதால் என்னை விமர்சிப்பீர்களா? பாடகி ஜானகியின் பேத்தி ஆதங்கம்

நான் அழவில்லை என்பதால் என்னை விமர்சிப்பீர்களா? பாடகி ஜானகியின் பேத்தி ஆதங்கம்

"சோகம் என்றும் வெளிப்படையாகவும், சத்தமாகவும்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை; சில நேரங்களில் அது மெளனமாகவும், உறுதியாகவும் கடந்து செல்லும்" என அப்சரா தெரிவித்தார்.

Published : July 14, 2026 at 7:11 PM IST

ஹைதராபாத்: "என் பாட்டி மீதான் அன்பை, கண்ணீர்விட்டு தான் நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை" என மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகியான ஜானகியின் பேத்தி அப்சரா வித்யுலா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தனது மயக்கும் குரலால் பல கோடி பேரின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த 'இசையரசி' ஜானகி (88) கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) மறைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை மைசூரின் கனியானஹுன்டி என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஜானகியின் உடலுக்கு அவரது பேத்தி அப்சரா, இறுதிச்சடங்குகளை செய்து எரியூட்டினார். இந்த காட்சிகள் பல தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்நிலையில், பேத்தி அப்சரா, தனது பாட்டியின் இறுதிச்சடங்கின் போது எந்தவித சலனமும் இன்றி இருந்ததாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கினர்.

குறிப்பாக, அப்சரா கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்பது மிகப்பெரிய விமர்சனமாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்சரா வித்யுலா ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது பாட்டி ஜானகியுடன் அப்சராவும், அவரது அக்கா வர்ஷாவும் உள்ள புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

அப்சரா வெளியிட்ட பதிவில், "எனது பாட்டி ஜானகிக்கு மிகவும் பிடித்தமானவர் எனது அக்கா வர்ஷா தான். எல்லா விதத்திலும் அவர்கள் இருவருக்கும் அப்படியொரு ஒற்றுமை இருந்தது.

எனக்கு பதிலாக எனது பாட்டியின் இறுதிச்சடங்களில் வர்ஷாதான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவள் ஏற்கனவே மறைந்துவிட்டாள்.

எனது பாட்டியின் மரணம் கொடுத்த வலியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை. சோகம் ஒருபோதும் மறைவதில்லை. அது வேறொரு வடிவத்தில், வாழ்நாள் முழுவதும் நம்மை அது சுமக்கச் செய்யும்.

இந்த துக்கத்திலும் ஒரு விஷயம் எனக்கு ஆறுதல் தருகிறது. எனது பாட்டியும், எனது அக்காவும் மறுபடியும் ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள்.

இந்த தருணத்தில் மற்றொரு விஷயத்தையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து, எனது பாட்டியின் மீது நான் வைத்துள்ள அன்பினை, என் கண்ணீரின் மூலம் அளவிடாதீர்கள். பாட்டி மீதான அன்பை, கண்ணீர்விட்டு தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மரணத்தை ஆன்மீக வழியில் பார்க்க எனக்கு கற்றுக்கொடுத்தவரே எனது பாட்டி தான். வாழ்க்கை முடிவடைந்தாலும், அன்பு முடிவுறாது என எனது பாட்டி அடிக்கடி கூறுவார்.

சோகம் என்றைக்கும் வெளிப்படையாகவும், சத்தமாகவும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் அது மெளனமாகவும், உறுதியாகவும் கடந்து செல்லும்.

என்னை பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் எதுவும் தெரியாதவர்கள் எல்லாம், எங்களை விமர்சிப்பதை பார்க்கும் போது மிகுந்த வலியை தருகிறது" என தனது பதிவில் அப்சரா வித்யுலா தெரிவித்துள்ளார்.