📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 04:33 PM

நாடாளுமன்ற முன்வரிசைக்கு மாறினார் அமைச்சர் இங் சீ மெங்

நாடாளுமன்ற முன்வரிசைக்கு மாறினார் அமைச்சர் இங் சீ மெங்

அண்மையில் பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்பட்ட இங் சீ மெங் நாடாளுமன்றத்தில் முன்வரிசை இருக்கைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்பு முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் தற்காலிக அமைச்சராக இருந்த பைஷால் இப்ராஹிம் தமது பதவியிலிருந்து ஜூலை 20ஆம் தேதி விலகியதைத் தொடர்ந்து, அவரது இருக்கை திரு இங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூலை 22ஆம் தேதி அறிவித்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருக்கை மாற்றங்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) முறைப்படி புதுப்பிக்கப்பட்டன.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் (என்டியுசி) தலைமைச் செயலாளருமான திரு இங், 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜாலான் காயு தனித்தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான ஸாக்கி முகம்மது, வெளியுறவு மற்றும் உள்துறை இரண்டாம் அமைச்சரான சிம் ஆன் ஆகியோர் முன்வரிசைக்குப் பின்னால் உள்ள வரிசையில் அமர்கின்றனர்.

அவர்களுக்குப் பக்கத்தில் தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ் அமர்கிறார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு மற்றும் உள்துறை மூத்த துணையமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ள கோ பெய் மிங், முன்வரிசைக்குப் பின்னால் உள்ள வரிசையில் மையப் பகுதிக்கு அருகில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஃபூ சேசியாங், ஷான் லோ ஆகியோரின் இருக்கைகளும் மாற்றப்பட்டு, இதர துணையமைச்சர்களுக்கு அருகே ஒதுக்கப்பட்டுள்ளன.