📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 12, 2026 07:04 AM

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்; மேலும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: எந்தவித விவாதமும் இல்லாததால் சர்ச்சை

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்; மேலும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: எந்தவித விவாதமும் இல்லாததால் சர்ச்சை

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்; மேலும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: எந்தவித விவாதமும் இல்லாததால் சர்ச்சை

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மேலும் 2 மசோதாக்களை எந்தவித விவாதமும் இல்லாமல் மக்களவை நிறைவேற்றியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20 அன்று டெல்லியில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்,

அயோத்தி ராமர்கோயில் உண்டியல் திருட்டு பிரச்னை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. நேற்றும் இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை முடங்கியது. இருப்பினும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றும் மசோதா உட்பட மேலும் 2 மசோதாக்களை மக்களவை எந்தவித விவாதமின்றி மக்களவை நிறைவேற்றியது.

நேற்றைய அலுவல் பட்டியலில் அமித்ஷாவின் பெயரில் இரண்டு மசோதாக்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அவைக்கு அவர் வரவில்லை. அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வகைசெய்யும் ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’ பரிசீலனைக்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்த இந்த மசோதா, முழக்கங்களுக்கு இடையே எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர், கூட்டுறவுத்துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் ‘தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026’-ஐ தாக்கல் செய்தார்; தொடர் அமளிக்கு மத்தியிலும் இந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதுவரை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில் 2 மட்டுமே விவாதம் நடைபெற்றது; எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றவை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.

மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படாத ‘மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான தொகுதி மறுவரையறை மசோதா’ மற்றும் ‘வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா’ ஆகியவை தாக்கல் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. மாநிலங்களவை: மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை முடங்கியது. இருப்பினும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களுக்குத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான ‘தேசிய தீர்ப்பாய ஆணையத்தை’ அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைப் பேச அவைத் தலைவர் அனுமதிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

* தேசிய தீர்ப்பாய ஆணைய மசோதாவின் சிறப்பு என்ன?

2021ஆம் ஆண்டில் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. தேசிய தீர்ப்பாய ஆணையத்தை அமைப்பதே இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும். இதில் இரண்டு நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களும், இரண்டு தொழில்நுட்பத் துறை சார்ந்த உறுப்பினர்களும் இடம்பெறுவர்; உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் இதற்குத் தலைமை தாங்குவார்.

இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும், சுதந்திரமானதாகவும் மற்றும் தகுதியின் அடிப்படையில் அமைந்ததாகவும் மாற்றும் வகையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தீர்ப்பாயங்களின் அதிகார வரம்பில் இந்த மசோதா எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

* கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பேசிய நிர்மலா சீதாராமன் கருத்துகள் நீக்கம்

மாநிலங்களவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய ஒரு சொற்றொடர், நேற்று அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

* விபி ஜி ராம் ஜி திட்டத்தால் ஒரே மாதத்தில் 9 கோடி வேலை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட ‘விக்சித் பாரத்-கியாரண்டி பார் ரோஸ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம் அமலுக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே 9.69 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

* கார்கேவிடமிருந்து எப்போதும் அழுத்தம் வருகிறது மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வருத்தம்

மாநிலங்களவையில் அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்புவதற்கான எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தான் எப்போதும் கார்கேவிடமிருந்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கூறினார். அவர் கூறுகையில்,’ எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாநிலம் சார்ந்த ஒரு விஷயத்தை எழுப்புகிறார்,

எனவே அதை ஊக்குவிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் அதே விஷயத்தை எழுப்பி அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. தயவுசெய்து உங்கள் இருக்கையில் அமருங்கள் கார்கே ஜி... நான் உங்களிடமிருந்து (கார்கே) மட்டுமே அழுத்தத்திற்கு உள்ளாகிறேன். அவர்கள் (ஆளும் தரப்பு) ஒருபோதும் எனக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. நீங்கள் எப்போதும் எனக்கு அழுத்தம் கொடுக்கிறீர்கள்’ என்றார்.

* தொழிலாளர் ஓய்வூதியத்தை ரூ.1000ல் இருந்து உயர்த்த வேண்டும்

தொழிலாளர் ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய பலன்களை ரூ.1000ல் இருந்து உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்று பாஜ மாநிலங்களவை உறுப்பினர் கே. லட்சுமண் கோரிக்கை வைத்தார். அவர் கூறுகையில்,’ உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவச் செலவுகள் பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஓய்வூதியம் இன்னும் ரூ. 1,000 ஆகவே உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய பலன்களை உயர்த்துவதற்கும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சமச்சீரான மற்றும் நிலையான கட்டமைப்பை ஆராய்ந்து பரிசீலிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

* தேசியஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி எம்பிக்கள் மோதல்

ஜார்க்கண்ட் காவல் துறை நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடை விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இடையே மோதல் எற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு இடையே ஒரு தடுப்பு வளையத்தை உருவாக்கினர். இருப்பினும் ​​இரு தரப்பு எம்.பி.க்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு எதிரெதிர் முழக்கங்களை எழுப்பினர்.

* எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு குழுவிடம் அனுப்ப அரசு பரிசீலனை

அந்நியப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’ஐ (எப்சிஆர்ஏ மசோதாவை) திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்குழுக் குழுவிடம் அனுப்ப அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நிறுவனம் தனது எப்சிஆா்ஏ உரிமத்தை இழந்தால், அதன் சொத்துக்களை நிர்வகிக்கவும் கையாளவும் ஒரு பிரத்யேக அதிகார அமைப்பை உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

* கூட்டுறவு மசோதாவின் முக்கிய அம்சங்கள்

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா, 2026 எந்தவித விவாதமின்றி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சம்:

* விவசாய விளைபொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட சரக்குகளின் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், சேமிப்பு மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் திட்டமிடுதல், ஊக்குவித்தல் மற்றும் நிதியளித்தல் ஆகியவை இதன் முக்கிய செயல்பாடுகளாகும்.

* கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது கூட்டுறவு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும், அத்தகைய நிதிகள் கூட்டுறவுச் சங்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில், நேரடியாகக் கடன்கள் மற்றும் மானியங்களை வழங்க இக்கழகத்திற்கு அதிகாரம் அளிக்க முன்மொழியப்படுகிறது. இதற்குக் கழகம் கோரும் பிணையத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்

* ஒன்றிய அரசின் ஒப்புதலுடன், எந்தவொரு கூட்டுறவுச் சங்கத்தின் அல்லது கூட்டுறவு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பங்கு மூலதனத்திலும் இக்கழகம் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

* கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்து முதன்மைப் பயனாளிகளாக இருக்கும் அதே வேளையில், கூட்டுறவுத் துறைக்கு உதவிகள் சென்றடையும் நிறுவன ரீதியான வழிமுறைகளை விரிவுபடுத்தவும், அத்துறையை வலுப்படுத்தவும் இந்த மசோதா முயல்கிறது.

* மக்களவையில் அமித்ஷா வராதது கோழை என்பதை நிரூபித்துள்ளது

மக்களவையில் தனது பெயரில் அலுவல் பணிகள் பட்டியலிடப்பட்டிருந்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் அவைக்கு வராமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி அவரை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில்,’ அவையில் அமித்ஷா பெயரில் அலுவல் பணிகள் இருந்தபோதிலும் அவர் வரவில்லை . இதன் மூலம் மிரட்டுபவர்கள் உண்மையில் கோழைகள் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கடந்த 17 நாட்களாக அமித்ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பங்கேற்காமல் இருப்பது உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு. இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது: அவர் நலமாக இருக்கிறாரா? பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இடையே எல்லாம் சரியாக உள்ளதா? இதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது’ என்றார்.