நேபாள பேரழிவில் பெற்றோர் மாயம்.. காப்பாத்துங்க நிவேதா பெத்துராஜ் கதறல்!
சென்னை: திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைப்பால், நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொடூரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும், மழைக்கான அறிகுறிகளும் இல்லாமல் ஏற்பட்ட இந்த எதிர்பாராத இயற்கையின் பேரழிவில், பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டு, இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 49 தமிழர்கள் உட்பட 288 இந்தியர்கள் மற்றும் மலேசியக் குடியுரிமை பெற்ற யாத்ரீகர்கள் என 1,500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திபெத்தில் உள்ள பிரமாண்ட பனிப்பாறை ஒன்று திடீரென உருகி உடைந்து, அங்குள்ள ஏரியில் பாய்ந்ததில் பெருமளவு நீர் நேபாளத்தில் பாயும் கோஷி ஆற்றில் கலந்து சீறிப்பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி பிரமாண்ட பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து அடித்துச் செல்லப்பட்டன. கைலாச யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திபெத் - நேபாள எல்லைப் பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , கைலாச மலைக்கு யாத்திரை சென்றுவிட்டுத் திரும்பிய அவரது பெற்றோர் உட்பட உறவினர்கள் பலர் நேபாள - திபெத் எல்லை இருந்தவர்களை காணவில்லை.
பெற்றோர் விவரம்: பெற்றோர்களான கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் (63) மற்றும் அவரது மனைவி தங்கலட்சுமி ஜோதிராமலிங்கம் (56). இவர்களுடன் கைலாச யாத்திரை சென்ற மலேசியக் குடியுரிமை பெற்ற உறவினர்களான ராமன் சுப்பிரமணியம் (59), நீலவேணி மாரிமுத்து (54), முருகன் சுப்பிரமணியம் (60), பத்மாவதி கோவிந்தசாமி (58) ஆகியோரும் மாயமாகியுள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் அறிந்த பொதுமக்கள், மீட்புக் குழுவினர் அல்லது அரசு அதிகாரிகள் உடனடியாக விவேக் (+91 8903455735) என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ் உருக்கம்: நேபாளத்திலும் திபெத் எல்லைப் பகுதியிலும் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தை பார்க்கும் போது, வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என்பது நமக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பது பணத்தைத் துரத்துவதோ, புகழைத் தேடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அலைவதோ அல்ல. ஒரே ஒரு நொடியில் இவை அனைத்துமே நம்மை விட்டு போய்விடும். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுங்கள்... உங்கள் வேகத்தை குறைத்து, உங்களுக்குள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார். ஆனால், நிவேதா பெத்துராஜின் தனது பெற்றோருக்காக இந்த பதிவினை போடவில்லை. நேபாளத்தில் காணாமல் போனவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவினை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருக்கிறார்.
அரசுக்கு கோரிக்கை: கைலாச யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 பேர் உட்படப் பல இந்தியர்கள் நேபாள எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளதால், அவர்களை உடனடியாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் நேபாள அரசுடன் இணைந்து அவசரகால மீட்ப நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.