நேபாளத்தில் வெள்ளப் பெருக்குகளுக்குப் பின்னர் தலைதூக்கும் மனிதாபிமானப் பேரழிவு
இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்குகளால் உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை கடந்த செவ்வாய்க் கிழமை 1,259 ஆக உயர்ந்துள்ளது. 5,083க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். திபெத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 519 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பேரழிவு ஏற்கனவே தீவிரமாக நிலவும் சமூக நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முதலாளித்துவ அரசாங்கங்களின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது: 30ஆம் திகதி, போதேகோஷி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, சீன அதிகாரிகள், “5.6 கிலோமீட்டர் (3.5 மைல்கள்) மேல்நோக்கி அமைந்துள்ள ஒரு பள்ளத்தில், மதிப்பிடப்பட்ட 1.4 மில்லியன் கன மீட்டர் (370 மில்லியன் கேலன்கள்) நீர் தேங்கியிருப்பதுடன் அது இன்னமும் ஓரளவு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் நெருக்கமான கண்காணிப்பு தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு மனிதாபிமானப் பேரழிவு உருவாகி வருகிறது. உணவு, சுத்தமான குடிநீர், மருந்துகள், உடைகள், தங்குமிடம் ஆகியவற்றின் பற்றாக்குறைக்கு மத்தியில், உயிர்தப்பியவர்கள் காணாமல் போன தமது உறவினர்களை ஏக்கத்துடன் தேடி வருகின்றனர். கத்மண்டுவிலும் நுவாகோட்டிலும் உள்ள மருத்துவமனைகளும் அரசாங்க அலுவலகங்களும் உயிர்தப்பியவர்களின் பட்டியல்களைச் சரிபார்க்க வரும் குடும்பங்களால் நிரம்பி வழிகின்றன. பலர் தமது உறவினர்கள் சேறு மற்றும் பனிக்கட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை நேரில் கண்டுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்புகளும் சேதமடைந்த சாலைகளும் நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளன.
பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன், முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தற்காலிக தங்குமிடங்கள் நெரிசலாகவும் சுகாதாரமற்றதாகவும் இருப்பதால், நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. அறுவடைக் காலத்தின்போது வெள்ளம் தாக்கியதால் பயிர்கள் அழிக்கப்பட்டதுடன், நீர்ப்பாசன அமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இதனால் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசரகால உணவுப் பொருட்கள் சென்றடைவதிலும் பெரும் சிரமம் நிலவுகிறது.
கோலானியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில், அடிப்படைத் தேவைகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கோபிலா பரியார் கத்மண்டு போஸ்ட் ஊடகத்திடம் தெரிவித்தார். “முகாமில் குடிநீர் இல்லை, எங்களால் போத்தல் குடிநீரைக்கூட வாங்க முடியவில்லை,” என்று அவர் கூறினார். “எங்களிடம் பணமில்லை, உடைகள் இல்லை, கோலானி சந்தையில் வாங்குவதற்கு ஏறக்குறைய எதுவுமே இல்லை.” அவரது 43 வயதான மைத்துனி சாந்தியும், 16 வயதான சகோதரர் அபினாஷும் வெள்ளப் பெருக்குக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர்.
பேரிடர் பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளால் அத்தியாவசிய மருந்துகளை வழங்க முடியவில்லை. குறிப்பாக நீண்டகால நோய்களுக்கான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. வெள்ளப் பெருக்குகள் அவற்றின் பிரதான நீராதாரங்களைத் துண்டித்துள்ளதால், சுகாதாரப் பராமரிப்பும் நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளபோதிலும், பல தொலைதூரப் பகுதிகளை இன்னமும் சென்றடைய முடியவில்லை, மருத்துவப் பணியாளர்களும் அதிக சுமையை எதிர்கொள்கின்றனர்.
அவசரமான சுகாதாரப் பராமரிப்பு, கழிவகற்றல் மற்றும் சுகாதாரத் தூய்மை தொடர்பான உதவிகள் வழங்கப்படாவிட்டால், தடுக்கக்கூடிய காரணங்களால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிவாரண அமைப்புகள் எச்சரிக்கின்றன. கத்மண்டு போஸ்ட்டிடம் பேசிய பரியார், “எனது தாய்க்கு ஆஸ்துமா உள்ளது, அவருக்கு இரண்டு அல்லது மூன்று மருந்துகள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் எங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார். மற்றொரு இடம்பெயர்ந்த குடியிருப்பாளரான ரகுபீர் கூறுகையில், “எனது தாய் தனது மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவமனையில் அந்த மருந்துகள் இல்லை. அவர் மருந்து குடித்து மூன்று நாட்களாகிவிட்டது,” என்றார்.
உயர் இரத்த அழுத்தத்திற்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் இரண்டு மருந்துகளான அட்டெனோலோல் மற்றும் லோசார்டன் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று மருத்துவமனை மருந்தாளரான மகேஷ்வர் யாதவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இணையம் இல்லாததால் எங்கள் மருத்துவமனையின் காப்புறுதித் திட்டமும் செயல்படவில்லை. நாங்கள் மருந்துகளும் தீர்ந்துகொண்டிருக்கின்றன,” என்றார்.
சுகாதார வசதிகளும் சுத்தமான குடிநீரும் பற்றாக்குறையாக உள்ளன. போதுமான கழிப்பறை வடிகால் வசதிகள் இல்லாமை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. நெரிசலான முகாம்களில் நோய்த் தொற்றுகள் பரவுவதால் இரண்டாவது பேரழிவு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். திரிசூலி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜேந்திர லாமா கூறுகையில், “இவ்வளவு பேர் ஒரே இடத்தில் ஒன்றாக வசிப்பதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது,” என்று தெரிவித்தார். “பாதுகாப்பான குடிநீர் மற்றும் முறையான கழிப்பறைகள் இல்லாமை, ஒரு நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
முகாம்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாகவும் அளவு குறைவாகவும் உள்ளது. இது குறிப்பாகப் கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகப் பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கான டீசல் ஆகியவற்றுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
சித்வான் மாவட்டத்தில், அடையாளம் காணப்படாத 229 உடல்களை நிலத்தில் அடக்கம் செய்யும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். உடல்கள் அழுகத் தொடங்கியதால் அவற்றைச் சேமித்து வைப்பது சாத்தியமற்றதாகியுள்ளது.
இந்தியா டுடே மேற்கொண்ட செயற்கைக்கோள் படிமப் பகுப்பாய்வின்படி, சியாப்ருபேசி ஆற்றங்கரையில் மட்டும் அமைந்திருந்த 192 கட்டமைப்புகளில் 114 சேதமடைந்துள்ளதுடன் அல்லது முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. திரிசூலி பஜாரில் 60க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
சுமார் 10,000 குடும்பங்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளமை, பரவலான வீடமைப்பு இழப்பை எடுத்துக்காட்டுகிறது.
குறைந்தபட்சம் 18 பாடசாலைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 20 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் 10,000 முதல் 17,000 வரையிலான பாடசாலை வயதுப் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள மேலும் டஜன் கணக்கான பாடசாலைகள் அதிக ஆபத்தில் உள்ளன.
சுகாதார வசதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன: மூன்று மருத்துவ நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஒரு மருத்துவமனை பகுதியளவில் சேதமடைந்துள்ளது, மேலும் இரண்டு மருத்துவமனைகளுக்கான பிரவேசம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பும் இதேபோன்று பேரழிவுக்குள்ளாகியுள்ளது. Rediff News இன் தகவலின்படி, வீதிகள் திணைக்களமானது 35 வாகனங்கள் செல்லக்கூடிய பாலங்களும் 45 தொங்கு பாலங்களும் சேதமடைந்துள்ளதாக அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பெட்ராவதி மற்றும் ரசுவாகாதி இடையிலான முழு 42 கிலோமீட்டர் நீளமான சாலைப் பகுதியும் பல இடங்களில் சேதமடைந்துள்ளதனால் ஏராளமான குடியிருப்புகள் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
பதினொரு நீர்மின் அலகுகளும் ஒரு சூரிய மின் நிலையமும் செயல்படுவதை நிறுத்தியுள்ளன. இதனால் 431.1 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் — நேபாளத்தின் நிறுவப்பட்ட மொத்த மின்சார உற்பத்தித் திறனில் சுமார் 10 சதவீதம் — தேசிய மின்வலையமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத்தில் இருந்த 15 மின் உற்பத்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன. அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட மொத்த உற்பத்தித் திறன் 470 மெகாவாட் ஆகும்.
நேபாளத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என்று நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே சனிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதாரத்தின் சுமார் பத்தில் ஒரு பங்குக்கு சமமான தொகையாவதுடன் நாட்டின் பொருளாதார நெருக்கடியை கடுமையாக மோசமாக்கும்.
வெளிநாட்டு தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை ஆரம்பத்தில் நிராகரித்த பின்னர், நேபாளம் சர்வதேச நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை பகிரங்கமாகக் கோரியுள்ளது. வெளிநாட்டு உதவியை ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சி (RSP) அரசாங்கம் காலதாமதமாக ஏற்றுக்கொண்டிருப்பது, பேரழிவை அது மிகவும் குறைத்து மதிப்பிட்டதையும் வெகுஜனங்கள் மீதான அதன் அலட்சியத்தையும் அம்பலப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல், ஊழல் ஆகியவை பேரிடர்களுக்கு பதிலளிப்பதற்கான அரசின் திறனைச் சீரழித்துள்ளன. வெகுஜன அதிருப்தியை பற்றி RSP அஞ்சுவதுடன், அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தை நன்கொடையாக வழங்குவது போன்ற சமிக்ஞைகளையும் செய்து வருகிறது.
ஏகாதிபத்திய சக்திகள் தமது பங்கிற்கு மிகச் சொற்பமான தொகையையே உறுதியளித்துள்ளன. அமெரிக்கா வெறும் 3.6 மில்லியன் டொலர்களையும் ஒரு பேரிடர் பதில் நடவடிக்கை ஆலோசகரை அனுப்புவதை பற்றியும் முன்மொழிந்துள்ளது. பிரிட்டனின் பதில் சற்றே மேம்பட்டதாக மட்டுமே உள்ளது: அவசரகால மீட்புப் பணியாளர்களும் 6.79 மில்லியன் டொலர் உதவியும் வழங்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் 2.32 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை ஒதுக்கியுள்ளது. அவுஸ்திரேலியா வெறும் 3.58 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. பேரழிவின் அளவுடன் ஒப்பிடும்போது, இந்தத் தொகைகள் கேலிக்குரிய அளவுக்கு சொற்பமானவையாகும். உண்மையில் எவ்வளவு தொகை நேபாளத்தைச் சென்றடையும் என்பது இன்னமும் தெரியவில்லை.
2015 நேபாள நிலநடுக்கத்தின் அனுபவம், இதற்கு ஒரு முக்கியமான படிப்பினையை வழங்குகிறது. அந்த நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்ததுடன், 7 பில்லியன் முதல் 10 பில்லியன் டொலர் வரையிலான சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்கா மொத்தமாக 61 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வழங்குவதாக உறுதியளித்தது. பிரிட்டன் 33 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 51 மில்லியன் டொலர்கள்) மனிதாபிமான உதவியாக உறுதியளித்ததுடன், இறுதியில் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் 83 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான மீள்கட்டுமானத் திட்டத்திற்கும் உறுதியளித்தது. ஐரோப்பிய ஆணையம் உடனடி மனிதாபிமான நிதியாக 16.4 மில்லியன் யூரோக்களை வழங்கியதுடன், பின்னர் அதன் மொத்த உதவியை 22.6 மில்லியன் யூரோக்களாக அதிகரித்தது.
எவ்வாறாயினும், வழங்கப்பட்ட உதவிகள் உறுதியளிக்கப்பட்ட தொகைகளை விட மிகவும் குறைவாகவே இருந்தன. 2015 ஜூன் மாதத்தில் நடைபெற்ற நன்கொடையாளர் மாநாட்டில், சர்வதேச நன்கொடையாளர்கள் மீள்கட்டுமானத்திற்காக சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் நேபாளம் 2.73 பில்லியன் டொலர்களை மட்டுமே பெற்றிருந்தது. உறுதியளிக்கப்பட்ட உதவிகளில் பெரும்பகுதி தாமதப்படுத்தப்பட்டது, வேறு நோக்கங்களுக்குத் திருப்பிவிடப்பட்டது அல்லது ஒருபோதும் வழங்கப்படாமல் போனது. இதனால் அறிவிக்கப்பட்ட தொகைக்கும் உண்மையில் கிடைத்த தொகைக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டது.
நேபாளத்தைப் பேரழிவுக்குள்ளாக்கி வரும் இந்த வெள்ளங்கள், பிரதான தொழில்துறை சக்திகள் நேரடியாகப் பொறுப்புச் சொல்லவேண்டிய காலநிலை நெருக்கடியின் நேரடி விளைவாகும். ஆனால், அவற்றின் பதில் குற்றவியல்தனமான அலட்சியத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பில்லியன் கணக்கான டொலர்கள் தேவைப்படும் ஒரு பேரழிவுக்கு சில மில்லியன் டொலர்கள் மட்டுமே வாக்குறுதியளிக்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலுக்கு எந்தப் பொறுப்பும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லாத வறிய மக்களே, அவர்களது உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் உட்பட, மிகப் பெரிய விலை கொடுக்கின்றனர்.
இதற்கு மாறாக, ஏகாதிபத்திய நாடுகள் இராணுவத்திற்காக டிரில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகின்றன. 2026 நிதியாண்டுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செலவினம் சுமார் 1.04 டிரில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில மதிப்பீடுகளின்படி, ஈரானுக்கு எதிரான போருக்காக வாஷிங்டன் 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. இது நேபாளத்திற்காக உறுதியளிக்கப்பட்ட தொகையை விட ஏறக்குறைய 28,000 மடங்கு அதிகமாகும்.
பிரிட்டனின் பாதுகாப்புச் செலவினம் 2025ஆம் ஆண்டில் சுமார் 89 பில்லியன் டொலர்களை எட்டியதுடன், 2026ஆம் ஆண்டில் சுமார் 92 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.4 முதல் 2.5 சதவீதமாகும். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் 2025ஆம் ஆண்டில் சுமார் 450 பில்லியன் டொலர்களாக இருக்கும் மொத்த பாதுகாப்புச் செலவினம், தீவிரமான மறுஆயுதமயமாக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2026ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு, நேபாளத்திலும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் வெகுஜனங்களின் மிக அடிப்படையான தேவைகளைக்கூட நிறைவேற்ற இயலாதிருப்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மனிதத் தேவை மற்றும் விஞ்ஞானபூர்வமான திட்டமிடலின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்கான ஒரு சோசலிசப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஒன்றிணைப்பதே முன்னோக்கிய பாதையாகும். சுற்றுச்சூழலின் அழிவைத் தடுப்பதற்கான போராட்டமானது, அதனை அழித்துவரும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.
மேலும் படிக்க