நேப்பாளம் வெள்ளம்: இந்தியர்கள் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்
புதுடெல்லி: நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 169 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டனர் என்றும் இன்னும் 275 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேப்பாளத்தின் திரிசூலிச் சந்தைப் பகுதியில் அபிஜித் சுரேஷ் பவார், தீபிகா அபிஜித் பவார், ஐந்து வயது சிறுவன் சமர்த் அபிஜித் பவார் ஆகிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அம்மூவரையும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நேப்பாளத்திலுள்ள இந்தியத் தூதரகம் உதவி வருகிறது என்று எக்ஸ் சமூக ஊடகம் வழியாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
நேப்பாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் இருப்பிடங்களை அறிந்து, அவர்களை மீட்கும் நோக்கில் நேப்பாளப் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் இந்தியக் குழுவினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
நேப்பாள அரசின் தேவைக்கேற்ப கூடுதல் உதவிகளைத் தொடர்ந்து வழங்க இந்தியா கடப்பாடு கொண்டுள்ளதாகத் திரு ஜெய்ஸ்வால் கூறினார். அவ்வகையில், கூடுதல் தடயவியல் கருவிகள், ‘பெய்லி’ பாலங்கள் உள்ளிட்ட தேவையான பொருள்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தியா இதுவரை 95 டன் உதவிப் பொருள்களை நேப்பாளத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக 30 சுரங்க மீட்பு வல்லுநர்கள், 19 தடயவியல் வல்லுநர்கள், ஐவர் அடங்கிய மருத்துவக் குழு என மொத்தம் 54 பேர் நேப்பாளம் சென்றுள்ளனர்.
இதுவரை 1,907 இந்தியர்கள் சீனாவிலிருந்து பாதுகாப்பாக நேப்பாளத்தை அடைந்துவிட்டனர் என்றும் திபெத்தியத் தன்னாட்சிப் பகுதியில் இந்தியர் எவரும் சிக்கித் தவிக்கவில்லை என்றும் திரு ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரசூவா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,344ஆக உயர்ந்துவிட்டது. சித்வான், நுவாகோட் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன; 5,000க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவாயிற்று எனத் தெரியவில்லை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அவர்களைக் கண்டுபிடிக்க நிலம் வழியாகவும் வான்வழியாகவும் 21,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள்மூலம் 13,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுவிட்டனர். வெள்ளத்தால் 7,500க்கும் மேற்பட்ட வீடுகளும் பாலங்களும் கடுமையாகச் சேதமடைந்துவிட்டன.