நேப்பாள வெள்ளம் தொடர்பிலான இனவாதக் கருத்துகள் ஏற்கத்தகாதவை: கா. சண்முகம்
நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன சிங்கப்பூரர்களைப் பற்றி இணையத்தில் வெளிவந்துள்ள இனவாதக் கருத்துகள் வெட்கப்படத்தக்கவை, மோசமானவை, ஏற்கத்தகாதவை என மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் இடித்துரைத்துள்ளார்.
இந்த விவகாரத்தைப் பரிசீலிக்கும்படி காவல்துறையைத் தாம் கேட்டுக்கொண்டதாகத் திரு சண்முகம் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறும் இத்தகைய கருத்துப்பதிவுகளை அகற்றும்படி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு சம்பந்தப்பட்ட ஊடகத் தளங்களைக் கேட்டுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
“அதே நேரத்தில், சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய எண்ணப்போக்கு இல்லை என நம்புகிறேன். எடுத்துக்காட்டாக, இங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம், நேப்பாளத்திற்கு 3 மில்லியன் வெள்ளிக்குமேல் நிதியைத் திரட்டியுள்ளது. எல்லா இனத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுமே ஈகையுள்ளம் கொண்டவர்கள்,” என்று அவர் கூறினார்.
ஈசூன் வட்டாரத்தில் உள்ள ‘சோஷியல் ஸ்பேஸ்’ (Social Space) அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 5), செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், நேப்பாளத்தில் தற்போது சிங்கப்பூர்க் காவல்துறையினரும் சுகாதார அறிவியல் ஆணைய (HSA) அதிகாரிகளும் உதவியளித்து வருவதையும் சுட்டினார்.
நேப்பாளத்தைச் சேர்ந்த கூர்க்கா அதிகாரிகள் சிங்கப்பூரில் பல காலமாகச் சேவையாற்றி வருவதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.
‘காணாமற்போனவர்கள் இங்குள்ளவர்கள் அல்லர்’, ‘இந்திய முகங்களைத்தான் காண்கிறோம்’, ‘உதவியை ரத்து செய்யுங்கள்’ என்பன போன்ற கருத்துகள் பதிவாவதைத் திரு சண்முகம் சுட்டிக்காட்டினார்.
“மிக மோசமான கருத்துப் பதிவுகளைத் தாங்கள் நீக்கவேண்டியிருந்ததாக ஊடக நிறுவனங்கள் என்னிடம் தெரிவித்துள்ளன,” என்றார் அவர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) உள்ளிட்ட பங்குதாரர்கள் பலரிடம் ஏர் இந்தியா பங்கு முதலீடு கேட்டதன் தொடர்பிலும் இந்தியர்களுக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டதைத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவும் இனரீதியான வசைகளுக்கு ஆளாகியிருப்பதாக மூத்த அமைச்சர் சண்முகம் கூறினார்.
“தலைமை நிர்வாகி இந்திய இனத்தவர் என்பதால் அவர் ஏர் இந்தியாவுக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும், அனைத்து நாட்டுப் பொதுமக்களும் இடம்பெறும் சமூகங்களில் சில பிரிவுகளில் இனவாதம் இருக்கக்கூடியதே எனத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் நமது பல்லின, பல சமயச் சூழலைப் பாதுகாக்கவும் சமூக நல்லிணக்கத்தைத் தக்கவைக்கவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். எனவே, இவர்களைக் கண்டிக்க முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.
மற்ற நாடுகளில், இதுபோன்ற மோசமான கருத்துகளை முதலில் சிறு எண்ணிக்கையினர் பேசத் தொடங்கிப் படிப்படியாக இத்தகைய பேச்சுகள் சாதாரணமாகிப் பின்னர் வழக்கமாக மாறுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அத்தகைய சூழலில் அரசியல், சமூகத் தலைவர்களும் இதுபோலப் பேசிப் பொதுவெளி உரையாடல்களில் இழிநிலையை உண்டாக்கக்கூடும் என்றும் கூறினார்.
அண்மையில் இனவாதக் கருத்துகள், குறிப்பாக இந்தியர்கள் பற்றிய கருத்துகள் அதிகமாவதையும் குறிப்பிட்ட மூத்த அமைச்சர், அவற்றில் சில வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் கூறினார்.
இதனைச் சிங்கப்பூரர்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறிய அவர், “நாம் மிகச் சிறிய பல்லின நாடு. இன, சமய அடிப்படையில் பிளவுபட்டோமானால், சிங்கப்பூரை வலுப்படுத்திய ஒற்றுமையை நாம் இழக்கக்கூடும்,” என்று அவர் எச்சரித்தார்.
விதிமுறைகளை நிலைநாட்ட எஸ்பிஎச் கடப்பாடு
தேசியச் செய்தி நிறுவனம் என்ற முறையில் எஸ்பிஎச் மீடியாவும் அதன்கீழ் இயங்கும் ஊடகங்களும் பொறுப்புமிக்க செய்திப் பகிர்வுக்குக் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அந்தக் கடப்பாடு, தனது செய்தியறைகளின் ஆசிரியர் குழுவினரின் நிலைப்பாடுகளில் பிரதிபலிப்பதாகவும் நிறுவனம் இதன் தொடர்பில் சனிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
“நமது நாட்டின் அடிநாத விழுமியங்களுக்குப் புறம்பாக உள்ள தூண்டுதல் பேச்சு, இழிவுபடுத்தும் கருத்துகளைக் கண்டிக்கிறோம். எங்கள் தளங்களில் ஊடக விதிகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.