நெருக்கடியில் முதலிடம்; முடிவெடுப்பதில் கடைசி இடம்: தென்னுலக நாடுகள் பற்றி ஜெய்சங்கர், இந்தியா செய்திகள்
நியூயார்க்: ‘குளோபல் சவுத்’ என்று குறிப்பிடப்படும் தென்னுலக நாடுகள் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவுகளில் குறைந்த அளவிலான செல்வாக்கையே கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உலகளாவிய நெருக்கடிகளின் பெரும் சுமையை அந்த நாடுகள் சுமப்பதாகவும் அவற்றுக்கு இடையே அதிக ஒற்றுமை தேவைப்படுகிறது என்றும் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
“இன்றைய சூழலில், உலகின் தென்பகுதியிலுள்ள நாடுகள் உலக நெருக்கடியில் முதல் வரிசையில் இருக்கலாம். ஆனால், முடிவெடுக்கும் அதிகாரத்தில் கடைசி வரிசையிலேயே உள்ளன,” என்றார் அவர்.
‘ஒத்த சிந்தனையுடைய உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் நண்பர்களின்’ உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்று திரு ஜெய்சங்கர் உரையாற்றினார்.
உலகளாவிய மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள், சீர்குலைந்த விநியோகத் தொடர்கள், அதிகரித்து வரும் வர்த்தகத் தடைகள், சிதறடிக்கப்பட்ட முதலீடுகள், பருவநிலை மாற்றப் பாதிப்புகள் ஆகியவற்றுடன் கணிசமான உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அவர் கூறினார்.
“நமது எதிர்காலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினைகளை விவாதிக்கும் முடிவெடுக்கும் அமைப்புகளில் உலகளாவிய தென்னுலக நாடுகள் அங்கம் வகிக்க வேண்டும்,” என்று கூறிய அவர், இந்த வட்டாரத்தின் முன்னுரிமைகளுக்குத் தீர்வுகாண ஐநா மற்றும் பன்முக அமைப்புகளின் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் தீவிர மோதல்கள் அதிகரித்து, உலகப் பொருளியலுக்கு, குறிப்பாக வளரும் நாடுகளைப் பேராபத்துகள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“பன்முகத்தன்மையை நோக்கித் திரும்ப வேண்டிய சூழலில், அது சிதைக்கப்படுவதை நாம் கண்டோம். தீர்வுகளை வழங்கும் என்று நாம் நம்பிய அனைத்துலக அமைப்புகள், நாம் தீர்க்கவேண்டிய ஒரு பிரச்சினையாகவே மாறிவிட்டன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“இந்நிலையில் எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு வசதி, பருவநிலை நடவடிக்கை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய அம்சங்களில் தென்னுலக நாடுகளிடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை,” என்று திரு ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.