நீக்கப்பட்ட அவைக் குறிப்பை பகிர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? சட்டப்பேரவை உரிமை மீறல் என்றால் என்ன?
நீக்கப்பட்ட அவைக் குறிப்பை பகிர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? சட்டப்பேரவை உரிமை மீறல் என்றால் என்ன?
சபாநாயகரால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் வெளியாகமல் இருக்க, அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.
Published : August 27, 2026 at 8:00 AM IST
By பாண்டியராஜ்.ப
தற்போது இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக பார்க்கும் நிலையில், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளையும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவை உரிமை மீறல் என்றால் என்ன? அவைக் குறிப்பை பகிர்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
சட்டப்பேரவை நேரலை
நீண்ட ஆண்டுகளாகவே சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திமுக தலைமையிலான அரசு முதன்முறையாக சட்டப்பேரவை வினாக்கள் விடை நேரத்தை நேரலை செய்தது.
அதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்து வருகிறது.
சர்ச்சையாகும் நேரலை விவாதம்
நீண்டநாள் கோரிக்கையான சட்டசபை நேரலை என்பது தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அது ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.
பொதுவாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசக்கூடிய வார்த்தைகள், சைகைகள், கருத்துக்கள் ஆகியவை சர்ச்சைக்குள்ளாகும் போதும், பிரச்சனை ஏற்படும் போதும் அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிடுவார். அப்படி நீக்கி உத்தரவிடும் பகுதிகளை பயன்படுத்தவோ, பகிரவும் கூடாது என்பது விதி. ஆனால் தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக செல்லும் நிலையில் சமூக வலைதளங்களில் அவற்றை பகிர்வது தொடர்கதையாகி வருகிறது.
ரீல்ஸ்களாகும் சட்டப்பேரவை நிகழ்வுகள்
சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது ஆளும் கட்சியை மற்றும் எதிர்கட்சியில் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் காரசார விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பதும், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதும் இயல்பான ஒன்று. அப்படி நீக்கப்படும் கருத்துக்களை நேரலை காரணமாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.
குறிப்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டையோ அவதூறாக பேசுவதையோ நீங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ஆனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக தொடர்ந்து வழங்கப்படுவதால், அவை அனைத்தும் ரீல்ஸ்களாக பகிரப்படுவதாகவும், அதிலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகள் கூட ரீல்ஸ்களாக பகிரப்படுவதாக பேரவையில் தெரிவித்திருந்தார்.
இதே கருத்தையே திமுகவின் கொறடா எ.வ.வேலு மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் சபாநாயகரிடம் தெரிவித்திருந்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி கொறடா உள்ளிட்டோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சட்டப்பேரவை அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை பகிர்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் யார், யார் வெளியிட்டார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கும் பட்சத்தில், அவை அனைத்தும் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அவைக் குறிப்பு என்றால் என்ன?
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் நடைபெறக்கூடிய விவாதங்கள், உரைகள், அமைச்சர்களின் பதில்கள், மற்றும் அங்கே நடைபெறக்கூடிய நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டு, முழுமையாக சட்டப்பேரவை செயலகத்தால் ஆவணப்படுத்தப்படும் பதிவேடு தான் அவைக் குறிப்பு என்றழைக்கப்படுகிறது.
இதில் அவை குறிப்பு விதிகளுக்கு மாறாகவோ, அவதூறான நாகரீகம் அற்ற அல்லது அலுவல் முறைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினால் அவற்றை சட்டப்பேரவைத் தலைவர் நீக்கி உத்தரவிடலாம் அல்லது அதனை நீக்க சட்டப்பேரவை தலைவருக்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கோரிக்கையை வைக்கலாம். அவர்களின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் நீக்கி உத்தரவு பிறப்பிப்பார்.
அவை உரிமை மீறல் என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டப்பேரவை சுதந்திரமாகவும் பயமின்றி செயல்படுவதற்காக சட்டப்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதை குறிக்கும் ஒன்று.
இந்த உரிமைகளுக்கு தடையாக இருப்பது, சட்டப்பேரவையை அவமதிப்பது, உறுப்பினர்களின் கடமைக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பது, பேரவை தலைவரின் உத்தரவுகளை மீறுவது அல்லது தவறான தகவல்களை தருவது, அவை உரிமை மீறல் எனப்படுகிறது.
மேலும், சட்டசபைக்கு வெளியே உள்ள நபர்களோ அல்லது உறுப்பினர்களோ அவையின் மாண்பை குறைக்க கூடிய வகையில் செயல்படுவதும் அவை உரிமை மீறலாகும்.
அவை உரிமைக் குழு
ஒவ்வொரு புதிய அரசு அமைந்த பிறகும் ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்டு அவை உரிமைக்குழு ஒன்று உருவாக்கப்படும்.
துணை சபாநாயகர் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவை முன்னவர் இவர்களை தவிர்த்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என 14 பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
மத்திய அரசுதான் விதிமுறைகளை வகுக்க வேண்டும்
இது தொடர்பாக சைபர் சட்ட நிபுணர் என்.கார்த்திகேயன் கூறுகையில், "இன்றைக்கு சட்டப்பேரவை நிகழ்வுகளை சமூக வலைதளங்களை பகிர்வது விவாத பொருளாகி உள்ள நிலையில், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் உள்ளது. அவைக் குறிப்பில் இல்லாததை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் போடக்கூடாது, போட முடியாது.
ஆனால் தற்போது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் சட்டப்பேரவை நிகழ்வுகளை எடுத்து சமூக வலைதளங்களில் போடுபவர்கள் தனி நபர்கள். அவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் என தனியாக சேனல் வைத்துள்ளனர். மேலும் இது மறைக்கப்பட்ட உள்ளடக்கம் இல்லை, நேரலையாக அனைவருக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு இன்னும் நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை.
அதேபோல் அவர்களை நாம் போடக்கூடாது என்று சொல்வதும் ஜனநாயகத்திற்கு எதிரானதும் கூட. ஏனென்றால் பிரிவு 19(1)- இன் கீழ் பேச்சை மற்றும் கருத்து வெளிப்பாடு சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமையாகும். அதனால் அவர்கள் அதை எடுத்து போட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இது எப்போது பிரச்சனை ஆகும் என்று பார்த்தால் பிரிவு 19(2)-இன் கீழ் ஒரு உள்ளடக்கத்தை பகிரும் போது அதன் மூலம் மாநில பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளையும் பட்சத்தில் அது குற்றமாகும். அது மாதிரி எதுவும் இல்லாத பட்சத்தில் இது நியாயமான விமர்சனத்திற்கு உட்பட்டது.
தனி அரசாணை வெளியிட வேண்டும்
அரசாணை வெளியிட்டாலும், மாநிலத்திற்குள் மட்டுமே அதை சிறப்பாக செயல்படுத்த முடியும், தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்கள் மட்டுமே அதை பதிவேற்றம் (Upload) செய்யக்கூடாது என கூற முடியும். ஆனால் மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டிலோ இருப்பவர்களையோ நாம் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
அப்படி உருவாக்கப்பட்ட விதிமுறைகளை பிரதான நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டாவிடம் வழங்கி யார் இது போன்ற உள்ளடக்கங்களை பகிரும் போது அதனை அந்த நிறுவனங்களே நீக்க வேண்டும். அதற்கான பொறுப்பை அந்த நிறுவனங்களிடமே மத்திய அரசு வழங்க வேண்டும். அப்படித்தான் நாம் தீர்வை காண முடியுமே தவிர, ஒவ்வொரு தனி நபராக தேடிப் பிடித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
மேலும் ஊடகங்களை பொருத்தமட்டில் அந்நிறுவனங்களுக்கென தனி நிர்வாக சட்டங்கள் ஏராளமாக உள்ளன, ஆனால் தனி நபர்களைப் பொருத்தமட்டில் நிர்வாக சட்டம் என்பது அரசமைப்புச் சட்டம் தான்.
ஏனென்றால் தனிநபர் இந்த தகவலை எங்கிருந்தும் திருடி கொண்டு வந்த பகிரவில்லை, அது பொதுவெளியில் உள்ள ஒரு நேரலை நிகழ்வு தான். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து, மத்திய அரசு தான் இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லையென்றால் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இதை கொண்டு வர முடியுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். ஏனென்றால், திறந்தவெளியில் உள்ள ஒன்றைத்தான் பயன்படுத்துகின்றனர். இது நேரலையாக இருக்கும் வரை இந்த பிரச்சனை தொடரத்தான் செய்யும்" எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடந்தது என்ன?
"பத்து நிமிடங்கள் கழித்தே காட்சிகளை வழங்க வேண்டும்"
இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை தொடர்பு கொண்டு பேசிய போது, "சட்டசபை நேரலை என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. கடந்த ஆட்சியில் நேரலை செய்வதற்கு முன்பே சட்டப்பேரவைச் செயலகத்தில் இருந்து 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி, அங்கே எல்லாம் என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை தெரிந்து கொண்ட பின்னர் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து தான் நாங்கள் அப்போதே சட்டசபை நேரலை நிகழ்வுகளை 10 நிமிடம் கழித்து கொடுத்து வந்தோம். ஒரு உறுப்பினர் பேசக்கூடிய கருத்து சட்டசபையோடு நின்று விடாது. அது அவர் சார்ந்த பகுதி அல்லது மாநிலம் சார்ந்த பகுதிகளிலும் பிரச்சனையை உண்டாக்கும்.
சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்தால், ஏதேனும் உறுப்பினர்கள் தவறுதலாக ஒரு கருத்தை பேசி அதன் மூலம் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நேரலையை 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் என்றும், இது குறித்து எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சியும் வழங்கி கடந்த மு.க.ஸ்டாலின் 2.O ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டும் என்பது தான் கடந்த திமுக ஆட்சியின் நோக்கம்.
தற்போது அமைச்சர்கள் சட்டமன்றத்தில் மரபு மீறி பேசும் வார்த்தைகளை பேரவை தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்த பின்பும், ஆளும் கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகவே 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய வகையில் 'ரூட்' அமைப்பு செயல்பட்டு வருகிறது, இன்றைக்கு சட்டசபையில் பேசக்கூடிய விஷயங்களை அந்த குழுதான் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தும் வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான போலி கணக்குகளை வைத்துள்ள அந்நிறுவனத்தின் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் உறுப்பினர்கள் தேவையற்ற கருத்துக்களை பேசும்போது அதனை நீக்கி விட்டு, பத்து நிமிடம் கழித்து அதை ஊடகங்களுக்கு கொடுத்து விடலாம். இந்த பிரச்சனைக்கு இதுதான் தீர்வு" என்றும் தெரிவித்துள்ளார்.