நீலகிரியில் கனமழை: உதகையில் மண் சரிவு: குன்னூர்
நீலகிரியில் கனமழை: உதகையில் மண் சரிவு: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பாறை விழுந்து ஒருவர் படுகாயம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மற்றும் சாலையில் பாறைகள் விழும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. உதகையில் கனமழை காரணமாக எல்கில் பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்குச் செல்லும் சாலையோரத்தில் இருந்த மண் திட்டுகள் சுமார் 300 அடி பள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளன. மண் மற்றும் கழிவுகள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள விவசாய நிலத்திற்குள் இருந்த கிணறு வரை சென்றுள்ளன.
உதகையைப் பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், குன்னூர் பகுதியில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த பாறைகள் திடீரென உருண்டு வந்து காரின் மீது விழுந்தன. இதில் காரில் பயணித்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக உதகை மட்டுமின்றி குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலையோரங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், மலைப்பாதைகளில் பாறைகள் விழும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரி பகுதியில் அதிகபட்சமாக 8.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கீழ் கோத்தகிரியில் 7.7 சென்டிமீட்டரும், எடப்பள்ளியில் 7.2 சென்டிமீட்டரும், கெத்தையில் 6.7 சென்டிமீட்டரும், குந்தா பகுதியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மதியத்திற்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண் சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.