📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 02:03 AM

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இணையவழி கையெழுத்து இயக்கத்தில் ஆதரவை பதிவு செய்தார்

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இணையவழி கையெழுத்து இயக்கத்தில் ஆதரவை பதிவு செய்தார்

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இணையவழி கையெழுத்து இயக்கத்தில் ஆதரவை பதிவு செய்தார்

சென்னை: நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினர். அப்போது, இணையவழி கையெழுத்து இயக்கத்தில் தனது ஆதரவையும் அவர் பதிவு செய்தார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் தமிழ்நாடு’ அமைப்பின் நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்தனர். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கம் முதலே உறுதியோடும் சமரசமின்றியும் செயல்பட்டு வரும் திமுக தலைவரிடம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாங்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்து கூட்டியக்கத்தினர் விளக்கி, அவரது ஆதரவை கோரினர்.

குறிப்பாக, நீட் எதிர்ப்பை தமிழ்நாட்டை கடந்து இந்திய அளவில் வலுப்படுத்தும் வகையில் #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் விழிப்புணர்வு காணொலியை வெளியிடுவது, சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புரை மேற்கொள்வது, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட தங்களது செயல்பாடுகள் குறித்து எடுத்துச் சொல்லி ஆதரவு கோரினர். நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்- தமிழ்நாடு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவையும் பதிவு செய்தார்.

* சிதைக்கப்பட்ட கனவுகள், குடும்பங்களின் கண்ணீர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர். அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம். அந்த இலக்கோடு Ban NEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் தமிழ்நாடு தோழர்களை இன்று (நேற்று) சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவை தெரிவித்தேன். இது அரசியல் வேறுபாடுகளை கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம். எனவே, திமுக தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.