நீட், காவல் மரணம், ஆணவக்கொலை... எப்போது வாய் திறப்பார் முதல்வர் விஜய்?
தமிழ்நாட்டின் முதல்வராக சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டிய, தன் மாநிலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவேண்டிய முதல்வர் விஜய், இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். இது பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் இந்த அமைதியை மௌனம் என்பதைக் காட்டிலும், அதிகார முகம் என்றும்கூடச் சிலர் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான ‘நீட்’டில் நடக்கும் முறைகேடுகளை எதிர்த்து, இந்தியாவின் தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் மாணவர்களும், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் சேர்ந்து நடத்திவரும் மாபெரும் போராட்டம் மாநிலங்களிலும் எதிரொலித்திருக்கிறது. சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள், டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராடியிருக்கின்றனர். அப்படிப் போராடிய மாணவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைதுசெய்திருக்கிறது தமிழக போலீஸ்.
உலகமே உற்று நோக்கும் இந்தப் பிரச்னை குறித்து முதல்வர் வாய் திறக்காததோடு, போராடும் மாணவர்களைக் கைதுசெய்யும் போலீஸ் நடவடிக்கையைத் தடுக்கவில்லை என்பதும் கடும்
விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. முதல்வர் விஜய், நடிகராக இருந்த 2017-ம் ஆண்டு காலகட்டத்திலேயே, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். ஆனால், `நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்’ என, நீட் குளறுபடிகளைக் களையச் சொல்லி நடக்கும் போராட்டத்தில் பட்டும் படாமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்.
இது ஒருபுறம் என்றால், கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த முதல்வர் விஜய், தற்போது தமிழகத்தில் நடந்திருக்கும் காவல் மரணங்கள் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது, முரணாக இருக்கிறது. போலீஸ்துறை நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் விஜய், இந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்று, யாரையும் தண்டிக்கவில்லை என்றாலும்கூட, குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகூடக் கூறவில்லை. இது அவர் மீதிருந்த நல்லெண்ணத்தை, சுக்கு நூறாக உடைத்துப்போட்டிருக்கிறது.
காவல் மரணங்கள் மட்டுமல்ல, கடந்த சில நாள்களில் மட்டும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில், ஐந்து சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்திருக்கின்றன. இதற்கும் முதல்வர் தரப்பிலிருந்து, இதுவரை எந்த ரியாக்ஷனும் இல்லை.
ஆனால், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, `ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் இயற்றப்படும்’ என்று கூறி, ஒரு சட்டசபைக் கூட்டத்தொடரே முடிந்துவிட்டது. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.
`எங்கே இந்த நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட கேள்விகளெல்லாம் கேட்கப்பட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியிருக்குமோ' என்ற நினைப்பில், செய்தியாளர்களை முதல்வர் விஜய் சந்திப்பதே இல்லை.
தன்னுடைய கொள்கை எதிரி என பா.ஜ.க-வை முதல்வர் விஜய் சொல்லிவந்தாலும், இந்த விஷயத்தில் மட்டும் பிரதமர் மோடியின் செயல்பாட்டை அவர் அப்படியே பின்பற்றுவதாகத் தெரிகிறது. `எதற்கும் ரியாக்ட் செய்வதில்லை என்பதில் இன்னொரு மோடியாகிறாரா விஜய்?’ என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இதை உடைப்பதற்காகவாவது வாய் திறப்பாரா... முதல்வர் விஜய்?