நீட் முறைகேடு, ராமர் கோயில் நிதி மோசடி விவகாரம் என முதல் நாளிலேயே அனல் பறந்த நாடாளுமன்றம்
நீட் முறைகேடு, ராமர் கோயில் நிதி மோசடி விவகாரம் என முதல் நாளிலேயே அனல் பறந்த நாடாளுமன்றம்
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை இன்று காலை முதல் மதியம் வரை அடுத்தடுத்து 4 முறைக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டன.
Published : July 20, 2026 at 4:11 PM IST
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20, 2026) காலை 11 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் முழக்கங்கள் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை முடங்கி, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, இரு அவைகளும் கூடி தேசிய கீதம் பாடப்பட்ட சில நிமிடங்களிலேயே மக்களவையில் காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அவையின் வழக்கமான பட்டியலிடப்பட்ட பணிகளை ஒத்தி வைத்து விட்டு அவசரப் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்களை ஏற்கெனவே வழங்கியிருந்தன.
நாட்டையே உலுக்கியுள்ள நீட் இளநிலை வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வந்த பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை மற்றும் நன்கொடைகளில் நடந்துள்ள பெரும் நிதி மோசடி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் மீது டெல்லி போலீசார் நடத்திய தடியடி மற்றும் அடக்குமுறைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகிய கோரி்க்கைகளை முன் வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தன.
ஒரு கட்டத்தில் மக்களவையில் சபாநாயகர் இருக்கையில் இருந்த ஜெகதாம்பிகா பால் மற்றும் திலீப் சைக்கியா உள்ளிட்டோர், "நாடே வெள்ள பாதிப்பு போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை சந்தித்து வரும் வேளையில், அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும்" என எம்பிக்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தனர்.
இறுதியாக, இன்று பிற்பகல் இரு அவைகளும் மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகளின் கூச்சலும் பதாகை போராட்டமும் ஓயாததால், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு, நாளை (ஜூலை 21) காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் எனத் தலைவர்கள் அறிவித்தனர்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே, மக்களவையில் உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி தவிர்த்து) 33-லிருந்து 37 ஆக உயரும்.
இதே போல், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'வந்தே மாதரம்' பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் 'தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா - 2026' என்ற முக்கிய மசோதாவை இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டிரு்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியால் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவில்லை.
கூட்டத் தொடரின் முதல் நாளே இரு அவைகளும் முழுமையாக முடங்கியது இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் அரசியல் போர்க்களமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.