📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 11, 2026 08:00 AM

‘நீட்' தேர்வில் ஜொலித்த தமிழக மாணவர்கள்

‘நீட்' தேர்வில் ஜொலித்த தமிழக மாணவர்கள்

பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். 2016-ம் ஆண்டு முதல் இந்த தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வு ரத்து என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. மாணவர்களும் இதை புரிந்துகொண்டு அந்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டார்கள். அரசு பள்ளிகளில்கூட இதற்கென தனிபயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் ராஜஸ்தானில் கசிந்ததால், 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் எழுதிய தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.

இதனால் மாணவர்களுக்கு சொல்லொண்ணா துயரம் ஏற்பட்டது. கஷ்டப்பட்டு படித்து தயார்படுத்திக் கொண்டதெல்லாம் ‘விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே' என்று வருந்தினர். மீண்டும் மறுதேர்வை தேர்வு கட்டணம் இல்லாமல் எழுதலாம் என்று அறிவித்தும், மாணவர்கள் மனநிறைவு அடையவில்லை. அதன்படி, ஜூன் 21-ந்தேதி மறுதேர்வும் நடந்தது. அப்போதும் மாணவர்கள் சற்றும் தளராமல் அதே ஏறத்தாழ 20 லட்சம் பேர் நீட் தேர்வை ஆர்வத்தோடு எழுதியிருந்தனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. அதில், 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையைவிட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 318 பேர் எழுதினர். அவர்களில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவில் தமிழக மாணவர்கள் ஜொலித்திருக்கிறார்கள். அதிக மதிப்பெண் பெற்ற முதல் 17 பேரில், 12-வது இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல, நாடு முழுவதும் 720-க்கு 690-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 138 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம், ஸ்ரீநிகா, சுடர், வனிஷா சதீஷ், சபரி, ஜெய்கிருஷ்ணா, சம்விதா, நவிதானா, நிகில்சிவநாதன், ஜனனி ஸ்வேதா, ரோகித் மாத்யூ ரவீந்திரராஜன், ஜெயகிருஷ்ணா ஆகிய 12 பேர் இடம்பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த 9 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களில் 7 மாணவர்கள், 2 மாணவிகள் ஆவார்கள். வழக்கமாக தமிழ்நாட்டில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் மாணவிகள்தான் அதிகம்பேர் கோலோச்சுவார்கள். ஆனால் இந்த தேர்வு முடிவில் அந்த நிலை மாறிவிட்டது.

அகில இந்திய அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகளே சாதித்திருந்தாலும், 690-க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களில் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மாணவ - மாணவிகளுக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நாளை மறுதினம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக தமிழகத்தில் இருந்து நிறைய டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு வெளிவரப்போகிறார்கள். வரும் ஆண்டில் அதிகமானோர் நீட் தேர்வை எழுத வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போதில் இருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படியும் நீட் தேர்வு இருக்கத்தான் போகிறது. அதற்கேற்ற வகையில் மாணவர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.