📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 10:34 PM

நீட் தேர்வு கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு

நீட் தேர்வு கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு

நீட் தேர்வு கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு - தவெக விளக்கம்

பாடகர் தெருக்குரல் அறிவு கைது சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான குரலுக்கு செவி மடுக்க வேண்டுமே தவிர ஒடுக்க கூடாது என்று கூறியிருந்தார்.

Published : July 21, 2026 at 9:06 PM IST

சென்னை: நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெகவின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list (சிறப்பு ஒத்திசைவு பட்டியலை) உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.கல்வியை மாநிலப்…

அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் தலைவர் விஜய், ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.

மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு பேசும் கட்சியின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அக்கட்சியின் அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் இளைஞர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், நேற்று நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பதற்றம் நிலவியது. தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக, சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய பாடகர் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டார். அவருடைய கைது சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான குரலுக்கு செவி மடுக்க வேண்டுமே தவிர ஒடுக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில், நீட் தேர்வு குறித்து தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.