📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 27, 2026 08:33 PM

நள்ளிரவில் வீட்டின் முன் மாந்திரீக பூஜை.. தட்டிக்கேட்ட ஜி.பி.முத்து மீது சரமாரி தாக்குதல்!

நள்ளிரவில் வீட்டின் முன் மாந்திரீக பூஜை.. தட்டிக்கேட்ட ஜி.பி.முத்து மீது சரமாரி தாக்குதல்!

சென்னை: பிரபல யூடியூபரும் நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பு நள்ளிரவில் மாந்திரீக பூஜை செய்யப்பட்ட கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட போது, போலிஸாரின் கண்முன்னே ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எதிர் தரப்பினர் நாற்காலிகளை தூக்கி வீசி சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நிலப்பிரச்சனை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்திருந்தார்.

மாந்திரீக பூஜை? : இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பு எதிர் தரப்பினர் மாந்திரீக பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஜி.பி.முத்து உடனடியாக வெளியே வந்து, அங்கே நின்றிருந்தவர்களிடம் இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. சண்டை முற்றிப்போக அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரப்பட்டினம் போலீசார், சண்டை குறித்து விசாரணை நடத்தினர்.

சரமாரி தாக்குதல்: காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அங்கிருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி, ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறையினர் இரு தரப்பினரையும் விலக்கிவிட்டுச் சமாதானம் செய்ய முயன்றபோதிலும், ஆத்திரத்தில் இருந்த கும்பல் ஜி.பி.முத்துவையும் அவரது குடும்பத்தினரையும் வெளுத்து வாங்கியது.

18 பேர் மீது வழக்குப்பதிவு: இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் மாறி மாறிப் புகார் அளித்தனர். அதனடிப்படையில், ஜி.பி.முத்து அளித்த புகாரின் பேரில் எதிர் தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீதும், எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஜி.பி.முத்துவின் குடும்பத்தினர் 10 பேர் மீது என மொத்தம் 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், தாக்குதல் சம்பவம் நடக்கும் போது அங்கே நின்றிருந்த போலீசார் மோதலைத் தடுத்து நிறுத்தாமல், அதைத் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.