📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 01, 2026 10:33 PM

நம்பிக்கையின் கருவிகளாக மாற பெரு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை!

நம்பிக்கையின் கருவிகளாக மாற பெரு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை!

நம்பிக்கையின் கருவிகளாக மாற பெரு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை!

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

“கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் இருந்து, துன்பமும் மனச்சோர்வும் நிறைந்த உலகில் நம்பிக்கையை மீண்டும் துளிர்விடச் செய்யுங்கள்” என்று இளைஞர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பெருவில் இடம்பெற்று வரும் 2026 தேசிய இளையோர் மாநாட்டில் (National Youth Day – JNJ 2026) பங்கேற்றுள்ள இளைஞர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இந்த மாநாடு திருஅவையின் வாழ்வைப் புதுப்பித்து வலுப்படுத்தும் அருள்நிகழ்வாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

“தைரியமாக இருங்கள்; கிறிஸ்து உயிருடன் இருக்கிறார்” என்ற கருப்பொருளில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை பெருவின் பியூரா மாகாணத்திலுள்ள சுலூகானாஸ் நகரில் இடம்பெறும் இந்த தேசிய இளையோர் மாநாட்டில், பெரு முழுவதிலுமிருந்து 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் அருள்சகோதரிகள் பங்கேற்று வருகின்றனர்.

தனிமனித மனப்பான்மையிலிருந்து வெளியேறி, நம்பிக்கையின் அடிப்படையில் உண்மையான நட்புறவுகளை உருவாக்கி, கிறிஸ்துவில் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை தங்கள் வாழ்வின் மூலம் சாட்சியமாக வெளிப்படுத்துமாறு இளைஞர்களை அவர் ஊக்குவித்தார்.

மேலும், இறைவன் வழங்கும் அருள்கொடைகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, துன்பத்திலும் விரக்தியிலும் வாழும் மக்களுக்கு நம்பிக்கையின் கருவிகளாக மாறுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டின் அனுபவம் கைப்பேசியில் உள்ள புகைப்படங்களாகவோ அல்லது சமூக ஊடகப் பதிவுகளாகவோ மட்டுமே நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் வெளிப்படும் விசுவாசச் சாட்சியாக மாற வேண்டும் என்றும், கிறிஸ்துவை நேசிக்கும் இளைஞர்களின் மகிழ்ச்சியும் ஊக்கமூட்டும் சாட்சியும் இன்றைய உலகிற்கு மிகவும் தேவையாக உள்ளது என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

இறுதியாக, நற்செய்தி அறிவிக்கும் அன்னை மரியாளின் பரிந்துரையில் அனைவரையும் ஒப்படைத்த திருத்தந்தை, பெரு முழுவதும் கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுமென இறைவேண்டல் செய்து காணொளிச் செய்தியை திருத்தந்தை நிறைவு செய்தார்.