📅 Sunday, 08 November 2026 IST | ஐப்பசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 01:00 PM

நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் வம்சாவளிப் பெண்

நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் வம்சாவளிப் பெண்

உலகளவில் மிகவும் உயரிய மற்றும் கௌரவமான விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இயற்பியல், மருத்துவம் உட்பட ஆறு துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், அமைதியை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருபவருமான 85 வயது சட்ட நிபுணர் நவநீதம் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நவநீதம் பிள்ளை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், சர்வதேச அளவில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் இந்த நோபல் பரிசைப் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

யார் இந்த நவி பிள்ளை?

1941ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிளேர்வுட் பகுதியில் பிறந்தவர் நவநீதம் நவி பிள்ளை. 19ம் நூற்றாண்டிலேயே இவரது தாத்தா, பாட்டி உள்ளிட்டோர், தமிழ்நாட்டில் இருந்து கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவில் குடி பெயர்ந்தனர்.

நவி பிள்ளையின் குடும்பப் பின்னணி வறுமை மிகுந்தது. அவரது தந்தை பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்தவர். குடும்பத்தில் வறுமை நிலவிய போதும், கல்வி ஒன்றே நம்மை கரைச் சேர்க்கும் என்ற தெளிவும், புரிதலும் நவி பிள்ளைக்கு சிறு வயதிலேயே உண்டானது.

டர்பனிலுள்ள பில்லே நடால் பல்கலைகழகத்தில் 1963ம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற அவர், 1965ல் சட்டத்தில் இளங்கலை முடித்தார். அதன் தொடர்ச்சியாக 1967ம் ஆண்டு நடால் மாகாணத்திலேயே சொந்தமாக சட்ட நிறுவனம் ஒன்றையும் அவர் நிறுவினார். இதன் மூலம் நடால் மாகாணத்தில் முதல் சட்ட நிறுவனம் தொடங்கிய பெண் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

தனது நிறுவனம் மூலம் இனவெறிக்கு எதிராகப் போராடியவர்கள், இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்காக அவர் வாதிட்டார். குறிப்பாக இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த நெல்சன் மண்டேலா உள்ளிட்டோருக்காக அவர் வாதாடினார்.

நவி பிள்ளையின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

சட்ட நிறுவனம் தொடங்கிய போதும், தொடர்ந்து சட்டத்தில் மேற்படிப்பு படிக்க முடிவு செய்த நவி பிள்ளை, 1982ல் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் சட்ட முதுகலையும், 1988ல் சட்ட அறிவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்துப் போராடிய நவி பிள்ளை, 1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியான முதல் வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருவாண்டாவில் 1994ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICTR) நீதிபதியாக நவி பிள்ளையை ஐநா பொதுச்சபை நியமித்தது. அதோடு, 1999ம் ஆண்டு தொடங்கி 2003 வரை அதன் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார். இதுதவிர, 2019ல் மியான்மர் மீது சுமத்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில்தான், ஜீன் பால் அகாயேசு என்ற வழக்கில், பாலியல் வன்முறையும், ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டால், அதனையும் இனப்படுகொலையாகக் கருதலாம், என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நவி பிள்ளை வழங்கினார்.

இந்தத் தீர்ப்பானது, பாலியல் வன்முறையை ஒரு கொடூர குற்றமாக அங்கீகரிப்பதில் முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.

ஈக்வாலிட்டி நவ் அமைப்பு உருவாக்கம்

2003ம் ஆண்டு தொடங்கி, 2008ம் ஆண்டு வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நவி பிள்ளை பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக பணியாற்றினார்.

இனப்பாகுபாடு, பெண்களின் உரிமைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு, இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் நவி பிள்ளை குரல் கொடுத்தார்.

மனித உரிமை கட்டமைப்பில், பெண்களின் உரிமையை மேலும் நிலை நிறுத்துவதற்கான நோக்கத்தில், ஈக்வாலிட்டி நவ் (Equality Now) என்ற அமைப்பை வழக்கறிஞர்களுடன் இணைந்து, 1992ம் ஆண்டு நிறுவினார்.

மேலும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக 2021ம் ஆண்டு நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். 2025ம் ஆண்டு வரை அப்பதவியில் அவர் நீடித்தார்.

நவி பிள்ளை ( இளவயது புகைப்படம்)

சட்ட புலமை மற்றும் தனிப்பட்ட நேர்மைக்காக விருது

வறுமையான குடும்பத்தில் பிறந்து, சட்டம் படித்து, இனவெறியால் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நவி பிள்ளைக்கு, இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நவி பிள்ளை ஏன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது தொடர்பாக, நோபல் பரிசு வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், ‘சர்வதேச சட்ட ஒழுங்கை மேம்படுத்துவதில் நவி பிள்ளையின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காகவும், அவரது சட்ட புலமை மற்றும் தனிப்பட்ட நேர்மை மற்றும் இணையற்ற தைரியத்திற்காகவும்’ இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையே போர்களும், மோதல்களும் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காகவும் நவி பிள்ளைக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் வம்சாவளி நபர்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு பெறுவது இதுவே முதன்முறை ஆகும். எனவே, நவி பிள்ளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தனது வாழ்க்கையையே சட்டப் போராட்டங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் அர்ப்பணித்துள்ள நவி பிள்ளைக்கு சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.