நதிநீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்
நதிநீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியா தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
Published : August 21, 2026 at 11:11 AM IST
சென்னை: தென் மாநிலங்களில் நிலவும் நீர் பிரச்சினைக்கு மாநிலங்களுக்கு இடையேயான பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என 31வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 31வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்க்க மல்லு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அமித் ஷா உரை
இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய வளர்ச்சியில் தென்னிந்தியாவின் பங்கு முக்கியமானது. இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொழில் வளர்ச்சி அல்லது விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியா தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.
வாகன உற்பத்தி, மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் தென்னிந்தியா மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிக்கு அதிக அளவிலான நேரடி அந்நிய முதலீடுகளும் வந்துள்ளன.
2014-ம் ஆண்டு முதல் மொத்தம் 70 மண்டலக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அவற்றில் 1,869 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு 1,445 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல பிரச்சினைகள் இந்த மண்டலக் குழுக் கூட்டங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் விவகாரம் குறித்து பேசிய, “ஜல் சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பங்கேற்கும் கூட்டு ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் நிலுவையில் உள்ள நீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் விரைவாகத் தீர்வு காண வேண்டும்” என அவர் வலியுறுத்தினார். அவரின் இந்தப் பரிந்துரையை தென்னிந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பிரம்மபுத்திரா முதல் காவிரி மற்றும் கோதாவரி வரையிலான முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உறுதி செய்ய முடியும்.
இத்திட்டம் பல நீர்வழிகளை உருவாக்கவும் வழிவகுக்கும். இது எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உதவுவதோடு, செலவு குறைந்த போக்குவரத்து அமைப்பையும் வழங்கும்" என அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து பேசிய அவர், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து தீர்வு காண வேண்டும். அதே போன்று, போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் அவசியம் என்றும், இந்த விவகாரத்தை முதலமைச்சர்கள் உணர்வுப்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பள்ளி கல்வியில் இருந்து மாணவர் இடைநிற்றலை குறைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மாணவர்களுக்குக்கான ஊட்டச்சத்தையும் மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தைத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களை பாராட்டிய அவர், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க முடியும் என தெரிவித்தார்.
போதைப்பொருள் தடுப்பு
அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின் பங்களிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனைத்துத் துறைகளும், மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளும் இந்த இயக்கத்தில் இணையும் வரை, வருங்காலத் தலைமுறையினரை இத்தீமையிலிருந்து நம்மால் காப்பாற்ற முடியாது” என போதைப்பொருளுக்கான எதிரான செயல்பாடுகளின் தென் மாநிலங்களில் மத்திய அரசுடன் இணைந்து பங்காற்ற அறிவுறுத்தினார்.