தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்; இரண்டு நிறுவனங்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பு
தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம்; இரண்டு நிறுவனங்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பு
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது.
Published : August 21, 2026 at 10:34 PM IST
சென்னை: தாய் மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதன் கீழ் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜுன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தை மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 14.07.2026 அன்று தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் TN Tenders Portal மூலமாக பங்கேற்று தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தனர்.
இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து BIS-தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ 0.01 என 'ஜாய் ஆலுக்காஸ்' என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில், 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' என்ற நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இத்திட்டமானது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளதால், ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், இந்த விலைப்புள்ளியை ஒப்பிட்டு இசைவளித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தாய் மாமன் தங்க மோதிரத் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்" என கூறப்பட்டுள்ளது.