நடிகர் நானி: தமிழ்த் திரையுலகம் என் முன்னோடி
திரைத்துறைமீதான தனது ஆர்வத்துக்கும் காதலுக்கும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களே முக்கிய முன்னோடிகளாக விளங்கியதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் நானி.
“கமல்ஹாசன், மணிரத்னம், கே. பாக்கியராஜ், பாரதிராஜா எனப் பல சாதனையாளர்களை இதற்குச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்,” என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி உலகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகியாக நடித்துள்ள கயாடு லோஹர் விளம்பரப் பிரசாரங்களில் கலந்துகொள்ளாதது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நானி, கயாடு லோஹர் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் தமிழ்ப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
மாரி செல்வராஜ் அவரை அனுமதிக்காததால் இந்தச் சந்திப்பிற்கு அவரால் வரமுடியவில்லை என்று கூறிய நானி, தமிழ்த் திரைப்படங்கள் தனக்கு விவிலியம் போல் வழிகாட்டும் மிக முக்கிய ஆவணமாகத் திகழ்வதாகக் கூறினார்.
“தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கை, வெறும் நட்சத்திர அந்தஸ்தினால் மட்டுமே வந்தது அல்ல.
“பல ஆண்டுகளாக விஜய்யை மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக உணர்வதாலும் தாங்கள் வளர்த்துக்கொண்ட நம்பிக்கையாலும்தான் இந்த அளவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“எதிர்வரும் ஆண்டுகளில் விஜய்யின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் வாக்காளர்களின் நம்பிக்கை உண்மை என நிரூபிக்கப்படும் என்றும் நம்புகிறேன்,” என்று கூறினார் நானி.
“நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போதெல்லாம் என் சொந்தத் திரைக் குடும்பத்திற்கு வந்த உணர்வே எனக்குத் தோன்றுகிறது,” என்றும் பகிர்ந்துகொண்டார்.
தமிழ்த் திரை ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு மிகவும் அதிகம் என்பதைப் பல்வேறு தருணங்களில் நான் உணர்ந்துள்ளேன்.
எனது திரைத்துறைப் பயணத்திலேயே மிகவும் கடினமாக உழைத்துப் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’ தான் என்று அவர் தெரிவித்தார்.
சடை முடி சவாலும் பெண்களும்
தொடர்ந்து பேசிய அவர், “நீளமான கூந்தலை சடை பின்னிப் பராமரிப்பது மிகவும் கடினமானது.
“படப்பிடிப்பு நடந்த 160 நாட்களிலேயே எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது,” என்று குறிப்பிட்டார்.
“வாழ்நாள் முழுவதும் கூந்தலைப் பராமரிக்கும் பெண்கள் மீது எனக்குத் தனி மரியாதையும் பெரு மதிப்பும் ஏற்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழில் தான் நேரடியாக நடித்த படங்கள் எடுபடாவிட்டாலும், தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக நானி கூறினார்.
நல்ல கதைகள் அமையும் பட்சத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றோருடன் இணைந்து எதிர்காலத்தில் நேரடியாகத் தமிழ் திரைப்படங்களில் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
கதையை விட, அதைச் சொல்ல வரும் இயக்குநரின் நேர்மையும் சினிமா மீதான தீவிரக் காதலுமே தனக்கு முதன்மையானது என்றும் நானி கூறினார்.
அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்படப் பல்வேறு மொழிகளில் உலகளவில் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.