📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 22, 2026 03:30 AM

ஓங்கி ஒலிக்கும் பீரங்கி முழக்கத்தில் ஒன்றுபடும் உணர்வு

ஓங்கி ஒலிக்கும் பீரங்கி முழக்கத்தில் ஒன்றுபடும் உணர்வு

அதிகாலை 4 மணி முதல் தீவிர பயிற்சியில் ஈடுபடும் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரி கேப்டன் எல்.வைஷ்ணவியின் கடும் உழைப்பும் கடமையுணர்வும், இவ்வாண்டின் அதிபருக்கான பீரங்கி முழக்க மரியாதை அங்கத்தில் முத்தாய்ப்பாக அமையவுள்ளன.

தேசிய தின அணிவகுப்பின் முக்கிய அங்கங்களில் ஒன்றான அதிபருக்கான பீரங்கி முழக்க மரியாதை அங்கம், முதன்முறையாக காலாங் பேசின் நீர்நிலையில் நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியைத் திறம்பட நடத்தும் மாபெரும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

25-பவுண்டர் பீரங்கிகளும் அவற்றை ஏந்தி நிற்கும் ‘எம்3ஜி’ மிதவைகளும், தண்ணீர் விளையாட்டு மையத்திற்கு அருகில் இயங்கவுள்ளன.

அதிபருக்கான பீரங்கி முழக்கம், சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் கண்கவர் நிகழ்வாக இருந்தாலும், அதற்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் மிகக் கடுமையானவை.

ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய திட்டமிடல்

இதற்கான திட்டமிடுதல் ஓராண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டது. அணிவகுப்பு நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரியிலேயே குழுவினர் தங்களின் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.

சிங்கப்பூர் பீரங்கிப்படையின் 23வது பட்டாளத்தையும் சிங்கப்பூர் போர்ப் பொறியாளர் படையின் 35வது பட்டாளத்தையும் சேர்ந்த மொத்தம் 151 படைவீரர்கள் இந்தப் பீரங்கி முழக்கக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வோர் ஒத்திகைக்கும் கடும் உழைப்பு தேவைப்படுகிறது. ‘எம்3ஜி’ மிதவைகளைத் தயார் செய்வதற்கும் பீரங்கிகளைப் பொருத்துவதற்கும் இந்தக் குழுவினர் அதிகாலை 4 மணிக்கே ஏவுதளத்திற்கு வந்துவிடுகின்றனர். அத்துடன், நள்ளிரவுக்குப் பிறகே அவர்கள் அங்கிருந்து புறப்படுகின்றனர்.

நீர்ப்பகுதியைச் சுற்றியுள்ள இந்தச் சூழலில் ராணுவ நடவடிக்கைகளை இயக்குவதற்கு உச்சக்கட்ட விழிப்புநிலையும் துல்லியமான ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக கேப்டன் வைஷ்ணவி, 32, தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அருகிலுள்ள கட்டுமானத் தள மேலாளர்கள், பொதுப் பயனீட்டுக் கழக அதிகாரிகள், தேசிய தின அணிவகுப்புத் துணைக்குழுக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இதில் இணைந்து செயல்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறில்லாத உத்தி

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, நீர்வழிகளை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, ‘சுழற்சிமுறை நீர்ப் பாதுகாப்புச் சரக’ (Dynamic Water Cordon) உத்தியை ஏற்பாட்டுக் குழுவினர் கையாண்டுள்ளனர்.

பகல்நேரப் பயிற்சிகளின்போது, பொதுமக்களின் படகுகளும் ராணுவக் கலன்களும் ஒன்றையொன்று குறுக்கிடாமல் இருப்பதை உறுதிசெய்ய ராணுவப் பாதுகாப்புப் படகுகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் வழக்கமான நீர் விளையாட்டு நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்கின்றன.

பயிற்சிக்காக வெற்றுத் தோட்டாக்கள் (Blank Ammunition) பயன்படுத்தப்படும்போது முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நீர்ப்பகுதி முற்றிலும் மூடப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

பொதுமக்களின் நலனை மேலும் உறுதிசெய்யும் வகையில், ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து ஒலி அளவீட்டு ஆய்வை (Noise Mapping) மேற்கொண்டதாக கேப்டன் வைஷ்ணவி கூறினார்.

“இதன்மூலம் மரியாதை வேட்டுகளின் சத்தம், சுற்றியுள்ள நகரச் சூழலுக்குப் பாதுகாப்பான வரம்பிற்குள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்தினரின் அளப்பரிய ஆதரவு

இதற்கு முன்பாகக் குடியிருப்பு வட்டாரங்களில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவந்த அவர், தாம் ஏற்றுள்ள தேசிய தின அணிவகுப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பொறுப்பு, தமக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல் எனக் குறிப்பிட்டார்.

“அணிவகுப்பு மரியாதையின்போது நாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் மிகவும் துல்லியமாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும்,” என்று கேப்டன் வைஷ்ணவி வலியுறுத்தினார்.

குடும்பத்தினரும் நண்பர்களும் பொழிந்த ஆதரவாலேயே இந்தப் பொறுப்பைச் செவ்வனே சமாளிக்க முடிந்ததாக கேப்டன் வைஷ்ணவி கூறினார்.

“கடுமையான பயிற்சிக் காலம் முழுவதும் எனது அன்புக்குரியவர்கள் எனக்கு ஊக்கமளிக்கும் தூணாகத் திகழ்கின்றனர். நான் அவர்களிடம் பகிரும் அனுபவங்களை ஆவலுடன் கேட்டு எனது உற்சாகத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றனர்,” என்றார் அவர்.

ஜூன் பிற்பகுதியில் நடைபெற்ற முதல் ஒருங்கிணைந்த பயிற்சியின்போது படகுகளும் குழுவினரும் முதன்முறையாக வெற்றிகரமாகச் செயல்பட்டதைக் கண்டபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக கேப்டன் வைஷ்ணவி தெரிவித்தார்.

எவ்வளவு களைப்பாக இருந்தாலும், குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேர்த்தியுடனும் பாதுகாப்புடனும் அணிவகுப்பு மரியாதையை நிறைவேற்றி வருவதை எண்ணித் தாம் பெருமிதம் கொள்வதாகவும் கேப்டன் வைஷ்ணவி கூறினார்.