ஓய்வு பெறும் கேன் வில்லியம்சனுக்கு விராட் கோலி உருக்கமாக விடுத்த பிரியாவிடைச் செய்தி இணையத்தில் வைரல்
ஓய்வு பெறும் கேன் வில்லியம்சனுக்கு விராட் கோலி உருக்கமாக விடுத்த பிரியாவிடைச் செய்தி இணையத்தில் வைரல்
சென்னை: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட்டின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனுக்கு (Kane Williamson), இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நெகிழ்ச்சியான மற்றும் உருக்கமான முறையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமகால கிரிக்கெட்டின் ஒப்பற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் விராட் கோலி அவரது நண்பர் என்ற முறையில் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
கேன் வில்லியம்சனின் ஓய்வு முடிவை அடுத்து, விராட் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில் மைதானத்தில் வில்லியம்சன் படைத்த இமாலய சாதனைகளைத் தாண்டி, அவர்கள் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகத் நீடிக்கும் நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை குறிப்பிட்டு மனதாரப் பாராட்டியுள்ளார்.
"பல வருடப் பயணத்தில், வெறும் எதிராளியாகத் தொடங்கி இன்று ஒரு நல்ல நண்பனாக மாறி இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதும், உங்களுக்கு எதிராக விளையாடுவதும் எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி. ஆனால், எல்லாவற்றையும் விட நமது நட்பையும், கிரிக்கெட் குறித்தும் அதற்கு அப்பாலும் நாம் பகிர்ந்து கொண்ட பார்வைகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன்" என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வில்லியம்சனின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோலி, "நாம் சந்திக்கும் போதோ அல்லது பேசும் போதோ கிடைக்கும் நினைவுகளை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். எனது அன்பான சகோதரனுக்கு எப்போதும் என் நல்வாழ்த்துகள். நீங்கள் உங்களின் பங்களிப்பைச் கச்சிதமாகச் செய்துவிட்டீர்கள், இப்போது ஓய்வெடுக்க முழுத் தகுதியுடன் இருக்கிறீர்கள். வாழ்த்துகள் நண்பா, உங்களது புதிய வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது" என்றும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
களத்தைத் தாண்டிய நட்பு
வில்லியம்சன் - கோலி ஆகிய இரு வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால், கோலியின் இந்த வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. இருவரும் சமகாலத்தில் தங்களின் அபார திறமையால் சர்வதேச கிரிக்கெட், இளையோர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில் தடம் பதித்தவர்கள். மைதானத்தில் ஒருவரை ஒருவர் வீழ்த்த கடுமையானப் போட்டியில் ஈடுபட்டாலும், களத்திற்கு வெளியே இவர்களது நட்பு பரஸ்பர மரியாதையுடன் இருந்தது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோருடன் இணைந்து, "ஃபேப் ஃபோர்" (Fab Four) என உலகக் கிரிக்கெட்டில் கொண்டாடப்பட்டவர்களில் விராட் கோலியும் கேன் வில்லியம்சனும் மிக முக்கியமானவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்ற விவாதத்தில் இந்த நால்வரும் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து அசத்தலான புள்ளிவிவரங்களுடன் விடைபெறும் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், 93 சர்வதேச டி20 போட்டிகளில் 2,575 ரன்களும், 175 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களுடன் 7,256 ரன்களும் குவித்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு அளப்பரியது. 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.06 சராசரியுடன் 9,515 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 33 சதங்கள் மற்றும் 38 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 251 ரன்கள் குவித்தது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் அதிகபட்ச ஸ்கோராகும்.
புள்ளிவிவரங்கள் அவரது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினாலும், விராட் கோலி போன்ற சமகால ஜாம்பவான் தெரிவித்துள்ள வாழ்த்து, கிரிக்கெட் உலகிற்கு அப்பால் வில்லியம்சனுக்கு இருக்கும் உயரிய மரியாதையைக் காட்டுகிறது. ஒரு மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்தாலும், நியூசிலாந்தின் இந்த 'ஜென்டில்மேன்’ கிரிக்கெட் உலகின் என்றும் அழியா பெருமையுடன் கம்பீரமாக விடைபெறுகிறார்.