ஒரே கூரையின்கீழ் சமூகச் சேவைகளை வழங்கும் மரின் பரேட் வளாகம்
மரின் பரேட் வட்டாரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வளாகம் ஒன்று, ஒரே கூரையின்கீழ் பலதரப்பட்ட சமூகச் சேவைகளைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது.
மரின் பரேட் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள ‘தி எங்கர் @ மரின் பரேட்’ வளாகத்தில் சமூகச் சேவை அமைப்புகள், அறநிறுவனங்கள் ஆகியவற்றுடன் கடைகளும் அமைந்துள்ளன.
சிங்கப்பூரில் நிலத்தடியில் அமைந்துள்ள இத்தகைய முதல் வளாகம் இது.
கிட்டத்தட்ட 450 மீட்டர் நீளமுள்ள வளாகத்தில் ஃபெய் யீ சமூகச் சேவைகள், டச் சமூகச் சேவைகள், குவான் உணவு, பானக் கடை போன்றவற்றைக் காண முடியும்.
இவ்வாண்டு ஏப்ரல் 4ஆம் தேதி வளாகம் அதன் கதவுகளைத் திறந்தது. 2027ஆம் ஆண்டு அது முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘தி எங்கர் @ மரின் பரேட்’ வளாகத்தில் தற்போது ஒன்பது சமூகச் சேவை அமைப்புகளும் அறநிறுவனங்களும் செயல்படுகின்றன. இன்னும் ஓர் அமைப்பு அங்குச் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வளாகத்தைப் பற்றியும் அதற்கு அருகில் உள்ள வர்த்தகங்கள், சமூக வசதிகள் பற்றியும் அறிந்துகொள்ள சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) குடியிருப்பாளர்களுக்குச் சிறப்பு நடை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரே கூரையின்கீழ் உள்ள பல்வேறு சமூகச் சேவை அமைப்புகள் இணக்கமாகச் செயல்பட முடியும் என்றார் மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கோ பெய் மிங்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சருமான திரு கோ, குடியிருப்பாளர்களுடன் சிறப்பு நடையில் கலந்துகொண்டார்.
“குடும்பங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. எனவே, ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளையும் அவற்றால் பெற முடியும்,” என்றார் அவர்.
புதிய வளாகத்தில் உள்ள சமூகச் சேவை அமைப்புகள், ஆலோசனையிலிருந்து, முன்னாள் கைதிகளைச் சமூகத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஆதரவு, பராமரிப்பாளர் ஆதரவு, உடற்குறையுள்ளோருக்கு வேலை தேடித் தருவதற்கான ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.
அத்துடன், தொண்டூழியர்கள் நடத்தும் நன்கொடைக் கடை, பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவு, பானக் கடைகள், மூத்தோருக்கு உகந்த உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளையும் புதிய வளாகம் கொண்டுள்ளது.