📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 17, 2026 07:32 AM

ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வலியுறுத்தல்: வணிகம் மேம்பட தினசரி மார்க்கெட் அமைப்பது அவசியம்

ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வலியுறுத்தல்: வணிகம் மேம்பட தினசரி மார்க்கெட் அமைப்பது அவசியம்

பழநி ஆயக்குடி கொய்யாவுக்கு தென்னிந்திய அளவில் பெரும் மவுசு உள்ளது. பழநி சுற்றுவட்டாரத்தில் நாட்டு ரகம், பனாரஸ், லக்னோ 49, ஆந்திரா பனாரஸ் ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. 2,500 ஏக்கரில் நடக்கும் கொய்யா சாகுபடியை நம்பி 2 ஆயிரம் விவசாய குடும்பங்கள் உள்ளன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களான திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கும், கேரளம், ஆந்திர மாநிலங்களுக்கு விற்பனைக்கும், வெளிநாடுகளுக்கும் ஆயக்குடி கொய்யா ஏற்றுமதியானது.

இந்நிலையில் ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டது. அதை தற்போது அமைந்துள்ள த.வெ.க., அரசு முன்னெடுத்து புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொய்யா சாகுபடியை விரிவான அளவில் செய்ய பழநி சுற்றுவட்டாரத்தில் நிரந்தர கொய்யா நாற்று பண்ணை இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தேனி மாவட்டம் பெரியகுளம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொய்யா கன்றுகளை வாங்கி வந்து நடும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொய்யா நாற்றுப்பண்ணை அமையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நேர விரயம், பொருள் விரயம் குறையும்.

மேலும் உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பழநி வட்டாரத்தில் கொய்யா மார்க்கெட் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மாறுபட்ட பருவநிலை, தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைப்பதில்லை. இதனால் ஏற்றுமதி தரத்திலான கொய்யா சாகுபடி பாதிக்கப்பட்டு வணிகம் தடைபடுகிறது. கொய்யா சாகுபடிக்கும், விவசாயிகளுக்கும் போதிய கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

மதிப்பு கூட்டுப்பொருளாக மாற்ற கொய்யா பழ கூழ், பழச்சாறு தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் புகழ்பெற்ற ஆயக்குடி கொய்யா விவசாயம் புதிய தொழில் இலக்குகளை அடையும்.