📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 24, 2026 08:34 PM

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தனித்தனியாக தேர்வறை ஒதுக்கப்பட்ட வினோதம்

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தனித்தனியாக தேர்வறை ஒதுக்கப்பட்ட வினோதம்

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு ஸ்டேட் வங்கி தேர்வு எழுத தனித்தனியாக தேர்வறை ஒதுக்கி இருப்பதற்கு, மாற்று நடவடிக்கை எடுத்து ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டிப்பிறந்த சகோதரிகள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2003 அக்டோபர் 16-ந்தேதி வீணா-வாணி சகோதரிகள் ஒட்டிப்பிறந்தனர். இதனால் அவர்களை பராமரிக்க இயலாமல் பெற்றோர் கைவிட்டனர். எனவே குழந்தைகளை நீலோபர் மருத்துவமனையில் பல ஆண்டுகள் பராமரித்தனர். பின்னர் அமிர்பேடு அரசு குழந்தைகள் இல்லத்தில் வளர்க்கப்பட்டனர்.

பிளஸ்-2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி

வீணா-வாணி சகோதரிகளுக்கு தலைப்பகுதியில் முக்கிய ரத்தநாளங்கள் ஒட்டியுள்ளதால் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தானது என்பதால் இதுவரை அவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருந்து வருகிறார்கள். பள்ளிப்படிப்பிலும், பிளஸ்-2 தேர்விலும் இவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். பி.காம். (பிஸ்னஸ் அனாலிடிக்ஸ்) வணிகப் பகுப்பாய்வு பட்டப்படிப்பை சிறப்புடன் முடித்தனர். தற்பொழுது சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆவதற்காக தீவிரமாக படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இருக்கும் சவால்களில் ஒன்று தேர்வு அறை சவால்தான். தலைகள் ஒட்டி பிறந்துள்ளதால் தேர்வு சமயத்தில் இவர்கள் ஒரே நேரத்தில் குனிந்துகேள்வித்தாளை பார்க்கவோ விடையை எழுதவோ முடியாது. ஒருவருக்கு ஒருவர் தங்கள் உடல் நிலையை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். இதுவரை இவர்களுக்கு அரசு வழங்கிய கூடுதல் நேர சலுகைகளை கூட மறுத்து சாதாரண மாணவிகளாகவே தேர்வு எழுதினார்கள்.

ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை

இந்த நிலையில் ஸ்டேட் வங்கித் தேர்வுக்கு இவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். வரும் ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு தனித்தனி தேர்வரைகள் மற்றும் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவரும் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின் கீழ் அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே தேர்வு மையத்தை மாற்றி தருமாறும் அவர்களது முன்னாள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வங்கித் தேர்வு நடத்தும் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.