📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 31, 2026 12:33 PM

பாகிஸ்தான் ஸ்டார் வீரருக்கு காயம்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்டிலிருந்து விலகல்

பாகிஸ்தான் ஸ்டார் வீரருக்கு காயம்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்டிலிருந்து விலகல்

பாகிஸ்தான் ஸ்டார் வீரருக்கு காயம்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்டிலிருந்து விலகல்

டிரின்டாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிரினிடாடில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஷான் மசூத் இரண்டாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீசிய வேகமான பந்து தாக்கியதில் மசூதிற்கு இந்த காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காயத்தால் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மசூத் விளையாட முடியாது. மேலும், ஆகஸ்ட் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஷான் மசூத் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது."டிரினிடாட் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து பாகிஸ்தான் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஷான் மசூத் விலகியுள்ளார்" என்று பிசிபி தெரிவித்துள்ளது.

மேலும், "ஸ்கேன் மற்றும் உடற்தகுதி பரிசோதனைக்குப் பிறகு, ஷான் மசூத்திற்கு பாகிஸ்தான் அணி மருத்துவக் குழு தற்போது சிகிச்சை அளித்து வருகிறது. ஆகஸ்ட் 19 அன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது, அவரது உடற்தகுதி முன்னேற்றத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். அதுவரை அவர் அணியுடன் தங்கியிருப்பார்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை தடுமாறிய நிலையில், தற்போது மசூத் இல்லாதது அணிக்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக தகுந்த மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போதைய நிலையில் அனுபவமிக்க பேட்ஸ்மேன்களான அப்துல்லா ஷபிக் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் தேர்வுக்கு தயாராக உள்ளனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி தற்போது கடைசி இடமான ஒன்பதாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.