பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி விவசாயிகள் நுாதன போராட்டம்
பல்லடம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, ஆவினுக்கு பால் ஊற்றுவதை புறக்கணித்த விவசாயிகள், சொசைட்டி முன்பாகவே தனியார் நிறுவனத்துக்கு பால் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் பலர், நேற்று ஆவினுக்கு பால் ஊற்றுவதை புறக்கணித்து, ஆவின் சொசைட்டி முன்பாகவே, தனியார் நிறுவனத்துக்கு பால் வழங்கினர்.
விவசாயிகள் கூறியதாவது:
சொசைட்டி துவங்கியபோது 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்த நிலையில், தற்போது 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். இப்பகுதியில் இருந்து தினமும் 700 லிட்டர் பால் ஆவினுக்கும், 1,400 லிட்டருக்கும் மேல் தனியார் நிறுவனங்களுக்கும் செல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை 7 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், மாட்டு தீவனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 52 ரூபாய் வழங்கும் நிலையில், ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும். இல்லையெனில், தனியார் நிறுவனங்களுக்கே பால் வழங்குவோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விவசாயி ரமேஷ் கூறுகையில், ''பருத்தி புண்ணாக்கு, கலப்பு தீவனம், தவிடு, தாது உப்பு உள்ளிட்ட மாட்டு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பால் விலையை உயர்த்த வேண்டும் அல்லது மானிய விலையில் தீவனங்களை வழங்க வேண்டும்,'' என்றார்.