பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மார்க்கண்டேயனை திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
Published : July 27, 2026 at 3:20 PM IST
திருநெல்வேலி: தமிழக முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் மார்க்கண்டேயன் உள்ள நிலையில், அவரை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்து, மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது தேவையான சட்ட உதவிகளை திராவிட முன்னேற்ற கழகம் வழங்கும் என மார்க்கண்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலினை பார்ப்பதற்காக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டவர் சிறை முன்பு கூடி இருந்தனர். அவர்கள் உதயநிதி உள்ளே வந்ததும் 'கலைஞரின் பேரன் வாழ்க' என உணர்ச்சி பொங்க கோஷங்கள் எழுப்பினர்.
60 ஆண்டுகளுக்குப் பின்...
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டார். அப்போது கருணாநிதி திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் இங்கு சுமார் 60 நாட்கள் சிறையில் இருந்தார்.
இந்த நிலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்பு கருணாநிதியின் பேரனான, உதயநிதி ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டை சிறைக்கு வருகை தந்தார். ஏற்கனவே கடந்த வாரம் மார்க்கண்டேயனை சந்திக்க வந்த திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, பாளையங்கோட்டை சிறை திமுகவுக்கு புதிது அல்ல, கலைஞர் கருணாநிதி இந்த சிறையில் இருந்ததால் மார்க்கண்டேயனுக்கு இது பெருமை என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.