‘பாம்பு கடி, நாகதோஷம், ஜலதோஷம்...’
சென்னை: சட்டப்பேரவையில் பாம்பு கடி குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், நாக தோஷம், ஜலதோஷம் என விவாதம் நீண்டதால், பேரவை சிரிப்பலையால் அதிர்ந்தது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ க.மோகன், “பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பதில்: இம்மருத்துவமனை 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 208 படுகை வசதியுடன் வட்ட மருத்துவமனையான செயல்பட்டு வருகிறது. பாம்பு விஷக்கடி முறிவு மருந்து, வெறிநாய் கடி நோய் மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவில் உள்ளன. கடந்து 2025- 26ம் ஆண்டில் பண்ருட்டி மருத்துவமனையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 142 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 39 பேர் அனுமதிக்கப்பட்டு விஷ முறிவு சிகிச்சை பெற்றுள்ளனர்.
திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தவெக அரசின் 100 நாட்களில் எவ்வளவு பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நகர்புறங்களிலும் மக்கள் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் பிளஸ் டூ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விஷ முறிவு சிகிச்சை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதா? அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி சிகிச்சை வசதி உள்ளதா? காலாவதியான மருந்துகள் குறித்து கண்காணிக்கிறதா?
அருண் ராஜ்: நடப்பாண்டில் 9,519 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 15,837 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 26 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு 16,142 பேர் பாதிக்கப்பட்டு, 27 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவமனைகளிலும் பாம்பு கடி விஷ முறிவு சிகிச்சை மருந்துகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவிலேயே பாம்பு கடி சிகிச்சை மருந்துகள் உள்ளன.
திமுக எம்எல்ஏ கே.என்.நேரு: திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி, காணக்கிளியநல்லூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர ஆரம்ப சுகாதார நிலையமாக அமைத்துத்தரும்போது, அங்கு பாம்பு கடி சிகிச்சையும் கிடைக்கும்.
அருண்ராஜ்: பாம்பு கடி சிகிச்சைக்காக சில சமயம், சில மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லை எனும் போது, மற்ற இடங்களுக்கு செல்ல செல்லும் சூழல் இருக்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லை. பாம்பு கடித்தவுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அந்த பொன்னான நேரத்தை வீணடிக்க கூடாது என்பதற்காக மக்களுக்கு எந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை கிடைக்கும், மாரடைப்புக்கு சிகிச்சை கிடைக்கும், அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருக்கிறதா என்பதை அனைவருக்கும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ‘நலம் செயலி’யில் வசதிகள் வெளிப்படையாக கொண்டுவரப்படும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சட்டப்பேரவை கேள்வி நேரம் ஆரம்பித்த பிறகு, 29 நிமிடங்களாக பாம்புக்கடி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விரிவாக பதில் அளித்து வருகிறார். இதன் மூலம் பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் நாகதோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அதை கழிக்க பிரார்த்தனை ஏதாவது இருந்தால் பேரவை தலைவர் நடத்திக் காட்ட வேண்டும். (என்றதும் பேரவையில் திடீர் சிரிப்பலை எழுந்தது)
அருண் ராஜ்: இந்த அரசு அறிவியல் பூர்வமான அரசு. தோஷம், பில்லி, சூனியம் போன்றவை மீது நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் தொகுதியில் தோஷ நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சி மட்டும்தான் எடுப்போம். ஜலதோஷம் தெரியும். பாம்பு கடிதோஷத்தை நான் கேள்விப்படவில்லை. தோஷத்தின் மீது நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பெரியார் இயக்கத்தை பேசிய திமுக இன்று தோஷத்தை பேசிக்கொண்டிருக்கிறது. நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள், அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சினையை அணுக கூடியவர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: பேரவை திமுக துணைத் தலைவருக்கு ஜலதோஷம். அதைத்தான் முன்னாள் முதல்வர் கூறினார்.
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்: கொஞ்சம் தள்ளி உட்காருங்கள். உங்களுக்கு தொற்றிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு சட்டப்பேரவையில் பாம்புக்கடி, நாகதோஷம், ஜலதோஷம் என விவாதம் நீண்டதால் பேரவை சிரிப்பலையில் அதிர்ந்தது.