பாபர் அசாம்
பாபர் அசாம்-க்கு தொடரும் சோகம்.. 3 ஆண்டுகளாக காத்திருந்த சதம் கனவு அருகில் வந்த போது சோகம்
டிரின்டாட்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 88 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதால், அவரது நீண்ட நாள் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிப்போனது.
கடந்த 2022 டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான கராச்சி டெஸ்டில் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்ததே அவரது கடைசி டெஸ்ட் சதமாகும். அது அவரது டெஸ்ட் வாழ்க்கையின் 9-வது சதமாக அமைந்தது. அதன் பிறகு, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
டிரினிடாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளில், பாபர் அசாம் தனது சதமில்லாத காலத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பொறுப்புடன் விளையாடிய அவர் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 88 ரன்கள் 147 பந்துகளில் எடுத்திருந்தார்.
ஆட்டத்தின் 75-வது ஓவரில் ஜோமல் வாரிகன் வீசிய பந்தை கவர் திசையில் தட்டிவிட்டு விரைவாக ஒரு ரன் எடுக்க பாபர் முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த அப்துல்லா ஷபிக் ரன் எடுக்க மறுத்து அவரைத் திருப்பி அனுப்பினார். அதற்குள் பாதி பிட்சை கடந்திருந்த பாபர் அசாம், மீண்டும் கிரீஸை அடைய முயன்றார். ஆனால், பிராண்டன் கிங் எறிந்த துல்லியமான டைரக்ட் ஹிட் மூலம் பாபர் அசாம் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் டைவ் அடித்த போதிலும் கிரீஸை தொடத் தவறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் ரன் அவுட் ஆவது இது 7-வது முறையாகும். இதன் மூலம் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் அசார் அலி மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோருடன் இணைந்து அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜாவேத் மியான்தாத் 8 முறை ரன் அவுட் ஆகி முதலிடத்தில் நீடிக்கிறார்.