ஃபார்ம் 6 சர்ச்சை... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...
ஃபார்ம் 6 சர்ச்சை... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய ஞானேஷ் குமார்...
கிழிந்து தொங்கும் தேர்தல் ஆணைய முகமூடி!
இந்திய ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் தூண்களில் ஒன்று தேர்தல் ஆணையம். அந்தத் தூணின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வேலையில் அதன் தலைவரே இறங்கியிருப்பது, நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் எடுத்த சில முடிவுகளும், உச்ச நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்களும் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கின்றன!
படிவம் 6-ல் நடந்த தில்லு முல்லு!
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்) நடந்த குளறுபடிகள் நம்மைத் தலைசுற்ற வைக்கின்றன. `அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடுநிலையாக இயங்கவேண்டிய ஒரு தன்னாட்சி அமைப்பு, ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறதா?’ என்ற நீண்டநாள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. எஸ்.ஐ.ஆர் பணியின்போது படிவம் 6-ல் நடந்த தில்லு முல்லு என்ன... உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றினாரா ஞானேஷ் குமார்?
இந்தியக் குடிமக்கள், தங்களுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைப் புதிதாகச் சேர்க்கப் பயன்படுத்தும் சட்டபூர்வமான விண்ணப்பப் படிவம்தான் ‘படிவம் 6’ (Form 6). இந்தப் படிவத்தில் தேர்தல் ஆணையம் ஒரு பெரிய மாற்றத்தைச் சமீபத்தில் செய்திருந்தது. எஸ்.ஐ.ஆர் பணியின்போது, புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் நபர், ``தன் தாத்தா, பாட்டியோ அல்லது பெற்றோரோ முந்தைய எஸ்.ஐ.ஆர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா?” என்ற புதிய உறுதிமொழிப் பத்தியைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என மாற்றப்பட்டது.
தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவு!
சட்டப்படி தேர்தல் படிவங்களில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சட்டத் திருத்தம் செய்து, அது குறித்து அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். ஆனால், அப்படி எந்தவோர் அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப் படாமலேயே இந்த மாற்றம் தன்னிச்சையாகச் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து, சமீபத்தில் புலனாய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். அதில், ``தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குக்கீழ் விவேக் ஜோஷி, சுக்வீந்தர் சிங் சந்து ஆகிய இரு தேர்தல் ஆணையர்கள் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்பது ஒரு கூட்டு அமைப்பு. அதில், பெரும்பான்மையாகவோ அல்லது ஒருமனதாகவோ மட்டுமே முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், கடந்த 10 மாதங்களில், எஸ்.ஐ.ஆர் நடைமுறைகளில் ஞானேஷ் குமார் எடுத்த தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் குறைந்தது 14 முறை தங்களது வலுவான எதிர்ப்புகளைப் பதிவேடுகளில் பதிவுசெய்திருக்கின்றனர். இதில், படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் ஒன்று’’ எனக் குறிப்பிட்டிருந்தது அந்தக் கட்டுரை.
டி.சி.எஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யார்?
இதற்குத் தேர்தல் ஆணையம், மேலோட்டமான மறுப்பை மட்டும் தெரிவித்திருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``ஆளும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாகச் செயல்படவே இந்த அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் படிவம் 6-ஐ சட்டவிரோதமாக மாற்றுவதற்குத் தேர்தல் ஆணையத்திலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்துக்கு உத்தரவிட்டது யார்... டி.சி.எஸ் சார்பில் இதில் கையெழுத்திட்ட அதிகாரி யார்... அவர்கள்மீது ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?’’ என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்தார். தேர்தல் ஆணையரைப் பதவி விலகச் சொல்லி பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றன `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள். காக்ரோச் ஜனதா பார்ட்டியும் இதையே வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்திருப்பது மத்திய ஆட்சியாளர்களுக்கும், ஞானேஷ் குமாருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்விதமாக, ``பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக 24 ஜூன், 2025 தேதியிட்ட உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் முழுமையான, ஒருமனதான ஒப்புதலோடுதான் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் 27 மே, 2026 தேதியிட்ட தீர்ப்பில் உறுதிசெய்திருக்கிறது. ‘படிவம் 6’ எந்தவிதத்திலும் சட்டவிரோதமாக மாற்றப்படவில்லை. எஸ்.ஐ.ஆர் நடைமுறையின்போது புதிதாகச் சேருபவர்களின் பெற்றோர் விவரங்களை உறுதிசெய்ய, படிவம் 6 உடன் ஒரு கூடுதல் உறுதிமொழிப் படிவம் மட்டுமே இணைக்கப்பட்டது. இந்த இணைப்பையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது’’ எனத் தெரிவித்திருந்தது. அதாவது, “படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படிதான் செய்யப்பட்டிருக்கிறது” என வெளிப்படையாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் போலி வாதம்!
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் சட்டவிரோதமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தது இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு. அந்த வழக்கு விசாரணையில், ``உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான் படிவம் 6 மாற்றப்பட்டது” என்ற தேர்தல் ஆணையத்தின் போலி வாதம் தவிடுபொடியானது. ``மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மாற்றத்தை மேற்கொண்டது யார் என நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது!” என்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அதோடு, தலைமை தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஃபார்ம்-6 விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை உணர்ந்த தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக, எந்தச் சத்தமும் இன்றி அந்த மாற்றத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
``தேசத்துரோக வழக்கில் கைதுசெய்ய வேண்டும்...’’
``உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காத ஒரு மாற்றத்தை, `நீதிமன்ற உத்தரவுப்படிதான் செய்தோம்’ என்று கூறி நாட்டு மக்களையும், இந்தியாவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தையும் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் ஏமாற்றத் துணிந்தது ஏன்... அவருக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்... சட்ட அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பு இல்லாமல், தன்னிச்சையாகப் படிவம் 6-ல் மாற்றங்களைச் செய்ய அதிகாரம் கொடுத்தது யார்... ஆணையம் செய்தது சட்டபூர்வமானது என்றால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்ததும் அவசர அவசரமாக அந்த மாற்றத்தை ஏன் திரும்பப் பெற்றீர்கள்... யாருக்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் ஞானேஷ் குமார்..?’’ எனப் பல்வேறு கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் காங்கிரஸ் கட்சியினர், ``பிரதமர் மோடி, அமித் ஷாவுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கிறார் ஞானேஷ் குமார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆதரவுடன் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஞானேஷ் குமாரின் முகத்திரை கிழிந்துவிட்டது. அவரைத் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்ய வேண்டும். மோடியும் அமித் ஷாவும் விசாரிக்கப்பட வேண்டும்’’ எனக் கொதிக்கிறார்கள்.
வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கவேண்டிய தேர்தல் ஆணையத்தின் தலைவரே, சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றும் வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது ஜனநாயகத்தின் ஆன்மாவை உலுக்கும் கொடூரச் செயல். அரசியலமைப்புமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைத்த இந்தச் செயலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையைச் சுழற்ற வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!