📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 08:04 PM

பைக் ரேஸ் ரோமியோக்களுக்கு கடிவாளம் போட அரசு முன்வருமா?: அந்துமணி பதில்கள்

பைக் ரேஸ் ரோமியோக்களுக்கு கடிவாளம் போட அரசு முன்வருமா?: அந்துமணி பதில்கள்

'ஓவர் நைட்'டில் உலக நாயகனான விமானி ஸ்மிட் மச்சாரை, இஸ்ரேல் சுதந்திர தின விழாவிற்கு, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளாரே?

ஸ்மிட் மச்சாரின் தைரியமான செயல்பாட்டுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தான் பாவம்... உலக நாயகன் என்ற பட்டத்தை அவருடன் பங்கு போட, ஒரு ரியல் நாயகன் வந்து விட்டாரே! ஆனால், நம்மூரில் ஒரு கட்சியினரும், ஸ்மிட் மச்சாரை பாராட்டவே இல்லையே... என்ன, 'ரிசர்வேஷனோ?'

ஆபத்தை விளைவிக்கும், 'பைக் ரேஸ்' ரோமியோக்களுக்கு கடிவாளம் போட அரசு முன்வருமா?

பைக் ரேஸ் செல்வோர் குறித்து, அவசர போலீஸ், '100' எண்ணிற்கும், 'வாட்ஸாப்' வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என, காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கென்ன நடவடிக்கை எடுப்பர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

'கிராமங்கள் வளர்ந்தால் தான் தமிழகம் வளரும் என்பது, த.வெ.க., அரசின் நிலைப்பாடு' என, முதல்வர் விஜய் கூறுகிறாரே?

சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்திஜி சொன்னது இதைத் தானே! ஜோேஹா நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை போல் பல நிறுவனங்கள், கிராமங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசும், அப்படி துவக்கப்படும் நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தரச் சான்றிதழ்கள் எளிதாக கிடைக்கும்படி வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான், வெளிநாடு களிடம் நாம் கையேந்தும் நிலை முற்றிலும் ஒழியும்.

ராமேஸ்வரம் விமான நிலையத்திற்கு ஒப்புதல் கிடைக்குமா?

ராமேஸ்வரத்திற்கு வெளிநாட்டினர், வடமாநிலத்தவர் என, ஏராளமானோர் தினசரி வருகின்றனர். மேலும், துாத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் சரக்கு கப்பல்களில் உள்ள பொருட்களை, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும். எனவே, ராமேஸ்வரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அனுமதி கொடுப்பதில், மத்திய அரசுக்கு தயக்கம் இருக்காது என நம்பலாம்!

'என் தந்தையின் சுயசரிதையை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற முக்கியமான படைப்புகளாக பார்க்கிறேன்' என்கிறாரே சவுந்தர்யா ரஜினிகாந்த்?

தன் தந்தையின் சுயசரிதை என்பதால் போற்றுகிறார் என்றாலும், இது கொஞ்சம், 'ஓவர் பில்டப்'பாக இருக்கிறதே!

'அதிகார பதவியால் ஈர்க்கப்படாமல், பொதுச் சேவையில் ஈர்க்கப்படும் இளைஞர்களை நாம் அரசுப்பணிக்கு கொண்டு வர வேண்டும்' என்ற பிரதமர் மோடியின் கருத்து?

அப்படி பொது தொண்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் அரசு பதவிக்கு வந்தால், அவர்களது வேலை, அர்ப்பணிப்புடன் உன்னதமாக இருக்கும் என்பதால், மோடி இப்படி கூறியுள்ளார்.