பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு:
'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவப் படிப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால், தமிழகத்திற்கான, 151 மருத்துவ இடங்களை, நமது மாணவர்கள் இழக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மாணவர்கள் நலனில் த.வெ.க., அரசு அக்கறை காட்டவில்லை.
நீங்க சொல்றது சரின்னே இருக்கட்டும்... கடந்த 2024, 2025ம் ஆண்டுகளிலும், இதேபோல தமிழகத்துக்கான மருத்துவப் படிப்பு இடங்கள் பறிபோயிருக்கே... அப்ப இருந்த, தி.மு.க., அரசு வழக்கறிஞரும் ஆஜராகாம துாங்கிட்டாரா?
காங்., தமிழக செய்தித் தொடர்பாளர் கே.சந்திரசேகரன் பேட்டி:
காவிரி பிரச்னைக்காக, தன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர், வாழப்பாடி ராமமூர்த்தி. காலையில் எழுந்தவுடன், காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்லி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி, தன் மேல் உள்ள சி.பி.ஐ., வழக்கிற்கு பயந்து, பிரதமர் மோடி அரசை எதிர்த்து பேச பயப்படுகிறார். 'மேகதாது அணை கட்டக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித்து, எம்.பி., பதவியில் இருந்து விலக அன்புமணி தயாரா?
அன்புமணி விலகிட்டா, காலியாகும் அந்த எம்.பி., பதவியையும், த.வெ.க.,விடம் பேசி காங்கிரசுக்கு வாங் கிடலாம்னு பார்க்கிறாரோ?
தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி அறிக்கை:
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகதாது பிரச்னையை கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறக்காதது, கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது, இப்படி விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகத்தை, 'ஷூட்டிங் மாடல்' த.வெ.க., அரசு செய்கிறது.
நீங்க, அஞ்சு வருஷமா எதையும் செய்யாம இருந்துட்டு, இப்ப வந்த அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிட்டே போனால், என்ன அர்த்தம்?
இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் பேச்சு:
எங்கள் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில், கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் நடந்தது. அதற்கு இடதுசாரி மாணவர்கள் ஆதரவளித்தனர். அங்கு வந்து சென்ற பலரும், எங்களுக்கு எதிராகக் கூட பேசினர். அது ஒரு ஜனநாயக மேடை. சில நேரங்களில் முதல்வரையும் விமர்சித்தனர். அதை, அந்த நேரத்தில் தடை செய்ய முடியாது. நோக்கம் முதல்வருக்கு எதிரானது அல்ல; மத்திய அரசுக்கு எதிரானது தான்.
'நீட் தேர்வுக்கும், முதல்வர் விஜய்க்கும் என்ன சம்பந்தம்...? அவரை ஏன் விமர்சிக்கணும்?'னு, அரசியல்ல பழுத்த அனுபவம் கொண்ட நீங்க கேட்டிருக்க வேண்டாமா?