பேட்மிண்டன்: சீனா மாஷ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சிராக், சாத்வீக் ஜோடி
பேட்மிண்டன்: சீனா மாஷ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சிராக், சாத்வீக் ஜோடி
மும்பை: இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, ஷென்செனில் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், சீன ஜோடியான ஹீ ஜி திங் மற்றும் ரென் சியாங் யு ஜோடியை வீழ்த்தி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தனர்.
இந்த தொடரில் தங்களது மூன்றாவது இறுதிப்போட்டியில் விளையாடிய சாத்விக் - சிராக் ஜோடி, கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடத்தையே பிடித்திருந்தது. ஆனால், இம்முறை கடுமையான போராட்டத்திற்கு பிறகு, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த சீன ஜோடியை வீழ்த்தி மகுடம் சூடினர்.
இந்த சீசனில் இந்திய ஜோடி கைப்பற்றும் இரண்டாவது பட்டம் இதுவாகும். முன்னதாக, இவர்கள் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பட்டத்தை வென்றிருந்ததோடு, தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தனர். செப்டம்பர் 19 முதல் ஜப்பானில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்களது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தயாராகி வரும் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்த இந்திய ஜோடிக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகமான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு முன்னால் இந்திய ஜோடியால் ஆரம்பத்தில் தற்காப்பை பலப்படுத்த முடியவில்லை. சிராக்கின் சில தவறுகளையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சீன ஜோடி முதல் கேமை 11-21 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றியது.
இருப்பினும், இரண்டாவது கேமில் வியூகங்களை மாற்றி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் - சிராக் ஜோடி, தங்களது பந்து பரிமாற்றங்களை நீட்டித்து எதிரணியை திணறடித்தனர். இதன் மூலம் இரண்டாவது கேமை 21-13 எனக் கைப்பற்றி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தனர்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி கேமில் இரு தரப்பிலும் புள்ளி வேட்டை தீவிரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் சீன ஜோடி 4-0 என முன்னிலை பெற்றாலும், சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தங்களின் அபாரமான ஸ்மாஷ் மற்றும் தற்காப்பு ஆட்டத்தின் மூலம் புள்ளிகளை சமன் செய்தனர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பதற்றமின்றி விளையாடிய இந்திய ஜோடி, 21-17 என்ற கணக்கில் இறுதி கேமைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.