பென்கூலன் பள்ளிவாசல்: சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்
பென்கூலன் பள்ளிவாசல் அண்மையில் தனது 200ஆம் ஆண்டுநிறைவை எட்டியது. அதனைச் சிறப்பிக்கும் வகையில், பள்ளிவாசல் நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக, மொத்தம் 415 பங்கேற்பாளர்களைக் கொண்டு இரண்டரை மணி நேரத்திற்குள் 41 திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.
ஆகஸ்ட் 16ஆம் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனையால் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் பென்கூலன் பள்ளிவாசல் இடம்பெற்றுள்ளது.
“முறையான திட்டமிடல், குழுப்பணி, சரியான முறையில் நேரத்தைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலமாக அந்தச் சாதனை சாத்தியமானது. பதிவுசெய்தல், அமரும் ஏற்பாடுகள், திருக்குர்ஆன் பிரதிகளை வழங்குதல் ஆகிய பணிகளை நிர்வகிக்க அர்ப்பணிப்புள்ள ஒருங்கிணைப்பாளர்கள் எங்களிடம் இருந்தனர்,” என்று பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. மு.யூ.முகம்மது ரஃபீக் கூறினார்.
திருக்குர்ஆனை ஓதும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் இமாம் மௌலவி கலீல் அஹமது ஹஸனி, உஸ்தாஸா நிஹார், உஸ்தாஸா குழுவினர் என அனைவரும் முக்கியப் பங்கு வகித்ததாக ஹாஜி. மு.யூ.முகம்மது ரஃபீக் தெரிவித்தார்.
பென்கூலன் பள்ளிவாசல் தொடக்கத்திலிருந்தே திருக்குர்ஆனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஹாபிஸ்களை உருவாக்குவது, குழந்தைகளைத் திருக்குர்ஆனை மனனம் செய்ய வைப்பது போன்ற பணிகளில் அது ஈடுபட்டு வருவதால், எல்லாரையும் கூட வைத்து திருக்குர்ஆனை ஓதி இந்த சாதனையை செய்யலாம் என்ற சிந்தனை தோன்றியதாக இமாம் மௌலவி கலீல் அஹமது ஹஸனி சொன்னார்.
“இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய 20 நாள்கள் எடுத்தன. பெண்களுக்கு 20 குழுக்கள், ஆண்களுக்கு 20 குழுக்கள் எனப் பிரித்தோம். ஒரு குழுவில் பத்துப் பேர் இருந்தனர். ஒருவருக்கு மூன்று பாகங்கள் ஒதுக்கப்பட்டன. இதன்மூலம், ஒரு குழுவால் ஒரு முழுத் திருக்குர்ஆனை ஓதி முடிக்க முடிந்தது,” என்றும் இமாம் மௌலவி கலீல் அஹமது ஹஸனி பகிர்ந்துகொண்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் தலைவர் ஓங் எங் ஹுவாட் அந்தச் சாதனையை அங்கீகரித்து பென்கூலன் பள்ளிவாசலுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அனைத்து நிபந்தனைகளும் முறையாக நிறைவுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், அவர் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட்டு, நேரத்தையும் உன்னிப்பாகக் கண்காணித்த பிறகே சாதனை பதிவுசெய்யப்பட்டது.