நசீர் கனியின் வாழ்நாள் சாதனையாளர் விருது
இளவயதில் தம் தந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு தொண்டூழியராகச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்குடன் தமது அறப்பணியைத் தொடங்கிய திரு நசீர் கனி, இன்று அவ்வமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
டௌன்டவுன் ஈஸ்ட் டி’மார்கி அரங்கில் செப்டம்பர் 12ஆம் தேதி நடந்தேறிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் 85ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
“என் தந்தை சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் பிரசாரப் பயிற்சிக் கூட்ட ஒருங்கிணைப்பு உறுப்பினராக இருந்தார். அவர் மற்ற உறுப்பினர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கியது எனக்குக் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பணிகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது,” என்றார் முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியரான திரு நசீர் கனி.
தம் தந்தையார் அ.அ.முஹைதீன் கனி, நேர்மை, சமூக அக்கறை போன்ற விழுமியங்களைத் தமக்குப் புகட்டியதாகத் திரு நசீர் கனி பகிர்ந்துகொண்டார்.
கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிற தமிழர்களுடன் துடிப்புடன் பங்கேற்றதால் இயல்பாகவே தமிழ்மொழியின்மீதும் நாட்டம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
உறுப்பினர் பயணம்
தமது தேசிய சேவை காலகட்டத்தின்போது திரு நசீர் கனி, கடையநல்லூர் முஸ்லிம் லீக்கில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
“அக்கட்டத்தில் நான் ஆக இளைய உறுப்பினராக இருந்தேன். மேசைகளையும் நாற்காலிகளையும் அடுக்குவது, தேநீர் வாங்கிவருவது எனப் பல வேலைகளைச் செய்தேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
சந்திப்புகளில் மூத்த உறுப்பினர்கள் பேசும்போது தமது கருத்துகளைத் தெரிவிக்க தொடக்கத்தில் தயங்கியபோதும் காலம் செல்ல செல்ல துணிவுடன் தமது குரலையும் வெளிப்படுத்தியதாகத் திரு நசீர் கனி சொன்னார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவருக்குத் துணைப் பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
“அப்போது கடையநல்லூர் முஸ்லிம் லீக்கிற்கான மாதாந்தரச் சந்தாவான 50 காசு, ஒரு வெள்ளி போன்ற தொகைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெறும் வழக்கம் இருந்தது. தஞ்சோங் பகார், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் நிறைய கடையநல்லூர் முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவந்தன.
“அப்போது மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிய முடிந்தது. அவற்றை நானும் மற்ற உறுப்பினர்களும் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வோம்,” என்றார் திரு நசீர் கனி.
தலைமைத்துவப் பொறுப்பு
1991ஆம் ஆண்டு அவரது 35வது வயதில் திரு நசீர் கனி சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஆக இளைய தலைவராகப் பொறுப்பேற்றார்.
தம்முடைய முன்னோடிகள் பாரம்பரிய, சமயம் சார்ந்த கொள்கைகளுக்கும் தமிழ்க் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்துவந்த வேளையில், அவரும் அதனைப் பின்பற்றி, பிற சமூக அமைப்புகளுடன் கைகோத்துச் செயல்பட முனைந்தார்.
ஆகையால், சிண்டா, ஜாமிஆ சிங்கப்பூர், முயிஸ் போன்ற பல அமைப்புகளுடன் இணைந்து வெவ்வேறு முயற்சிகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
இளையர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்ச்சிகள், முகாம்கள், நிதி திரட்டுதல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்ததாகத் திரு நசீர் கனி பகிர்ந்துகொண்டார்.
“மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றியது, கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முயற்சிகளைப் பலரிடம் கொண்டுசேர்க்க பெரிதும் உதவியது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் பலரும் அவரது இளவயது காரணமாக தமது முயற்சிகள்மீது ஐயம் கொண்டபோதும் அவற்றைத் தாம் முறையாக வழிநடத்தியதால் அவர்களது மனம் மாறியது என்றும் திரு நசீர் கனி கூறினார்.
நீடித்த சமூக சேவை
18 ஆண்டுகள் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கில் தலைமைத்துவப் பயணத்தைத் தொடர்ந்த திரு நசீர் கனி, 2009ஆம் ஆண்டு லீக்கின் தற்போதைய தலைவரான திரு ராஜா முகம்மதிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அவர் வேறு பல சமூக அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகள் வகித்துள்ளார். சிண்டா, மெண்டாக்கி, முயிஸ் ஆகிய அமைப்புகளில் குழு உறுப்பினராக அவர் சேவையாற்றினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் கோஸ்ட் இந்திய நடவடிக்கைகள் செயற்குழுவிற்கும் 1998லிருந்து 2000ஆம் ஆண்டு வரை இந்திய முஸ்லிம் பேரவைக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். தற்போது வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராக தமது சேவையை அவர் தொடர்ந்து வருகிறார்.
குடும்ப ஆதரவு
தமது சமூக சேவைப் பயணத்தில் தமக்கு இருக்கும் ஒரே வருத்தம் தம் மகன்கள் இருவருடனும் மகள்கள் இருவருடனும் வளரும் பருவத்தில் அவர்களுடன் நேரம் செலவிடாமல் போனதுதான் என்று திரு நசீர் கனி குறிப்பிட்டார்.
தாம் சமூக பொறுப்பில் நேரம் செலவிட்டபோது குடும்பப் பொறுப்பைக் கவனித்துக்கொண்ட தம் மனைவி மும்தாஜ் பீவிக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“மனத்திற்குப் பிடித்த சமூகப் பணியைச் செய்வது என்றும் சோர்வளிப்பதில்லை. புதிய பொறுப்புகளில் என்னால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயல்கிறேன்,” என்று திரு நசீர் கனி கூறினார்.