பினாமி பெயரில் சுரங்க நிறுவனம் நடத்துபவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியாது: ஆதவ் அர்ஜூனா
சென்னை: பினாமி நிறுவனங்கள் உருவாக்கி சுரங்கம் நடத்துபவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:அரசின் வளங்கள் இன்றைக்கு அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது. எந்த கட்சி என சொல்ல விரும்பவில்லை. ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் யாரும் குவாரி தொழிலில் ஈடுபடவில்லை. எந்த தொழிலும் செய்யப் போவதில்லை.
மதுபானத்தை எப்படி குறைக்க வேண்டும் என திமுக சொல்கிறது. டாஸ்மாக்கை பற்றி பேசுவார்கள். ஆனால், டாஸ்மாக் பின்னால் இருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார், பினாமிகள் யார் என்பதை நீங்கள் பேச வேண்டும். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் , எந்த கட்சியில் இருக்கிறார், எந்த கட்சி சார்பில் எம்பியாக இருக்கிறார் என்பதை எல்லாமே பேச வேண்டும். மணல் குவாரி உள்ளிட்டவற்றை தங்களின் பெயர்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்று வந்த பிறகு, ஏராளமானோர் '' என்னிடம் ஏதும் இல்லை'' என்று சொல்வார்கள். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் மருத்துவக் கல்லூரி , பொறியியல் கல்லூரி இருக்கும். இதெல்லாம் எங்கு இருந்து வந்தது என்றால், குவாரிகளில் உள்ள பினாமிகள் வாயிலாக . அங்கு , 10 அடி எடுக்க வேண்டும் என்றால் 50 அடி கல் எடுப்பது, 50 அடி என்பதில் 200 அடி கல் எடுப்பது. வேண்டும் என்றால் அபராதம் போட்டுக் கொள்ளுங்கள் என்பார்கள். கூடிய சிக்கிரம் முதல்வர் செய்வார். அபராதமும் விதிப்பார். கைதும் செய்வார். அனைத்து நடவடிக்கைகளும் இருக்கும்.
பினாமிகளிடம் இருக்கும் வளங்களை மக்களின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். சீல் வைக்கும் போது ஜல்லிமற்றும் இயற்கை வளங்களை முடக்குகின்றனர். இந்த ஜல்லி, மணல் உள்ளிட்டவை யாரிடம் இருக்கிறது என்றால், பழைய ஆட்களிடம் உள்ளது. சீல் வைத்தால், கிடைக்காமல் செய்து விடுகின்றனர். இதனால் விலை ஏறுகிறது.
மக்கள் மன்றம் முன்பு நாங்கள் ஆதாரம் கொடுத்தால் போதும், யாரையும் சிறையில் தள்ள வேண்டாம். பினாமி நிறுவனங்கள் உருவாக்கி சுரங்க நிறுவனங்கள் நடத்துபவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. முன்னாள் அமைச்சர் ஒருவர் மதுரையில் சுரங்கத்தை கட்டுக்குள் வைத்து இருந்தார். அவரால் டெபாசிட் வாங்கவில்லை. அவர் சட்டசபைக்கு வர முடியவில்லை. இது தான் மக்களின் தீர்ப்பு.
இவ்வாறு ஆதவ் ஆர்ஜூனா பேசினார்.