``நெல்லைப் பாதுகாக்கப் பணம் இல்லை, எம்.எல்.ஏ
``நெல்லைப் பாதுகாக்கப் பணம் இல்லை, எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க பணம் இருக்கா?’’
கொதிக்கும் விவசாயிகள்!
மரத்தடி மாநாடு
`வாத்தியார்’ வெள்ளைச்சாமி, `ஏரோட்டி’ ஏகாம்பரம், இருவரும் தேநீர்க்கடை பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வியாபாரத்தை முடித்துவிட்டு அந்த வழியே வந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவர்களோடு இணைந்து கொண்டார். சூடான போண்டாவை சுவைத்துக் கொண்டே அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.
“நாட்டில் நடக்கிற கொடுமை, கூத்தை யெல்லாம் பார்த்தா, எனக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகுதய்யா... ‘அத்தனை எம்.எல்.ஏ-க்களுக்கும் தமிழக அரசின் சார்பில் கார் வழங்கப்படும். எரிபொருள், ஒட்டுநருக்கான சம்பளம், கார் பராமரிப்பு எல்லாத்துக்கும் சேர்த்து வாகனப்படியாக ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’னு முதலமைச்சர் விஜய் அறிவிச்சிருக்கார்.
‘இதுதான் மாற்றத்துக்கான புதிய அரசா? முதலமைச்சருக்குக் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா?’னு விவசாயிகள் கொந்தளிக் கிறாங்க. கார் வாங்குறதுக்கு மட்டுமே முதல்கட்டமா 150 கோடி ரூபாய் செலவாகும். எரிபொருள், பராமரிப்பு, ஒட்டுநர் ஊதியம் எல்லாத்துக்கும் ஒவ்வொரு வருஷமும் பல கோடி ரூபாய் செலவாகும். எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவங்க பெரும் கோடீஸ்வரர்கள் தான். த.வெ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களில் பலருக்கு கார் வாங்க வசதி இல்லைனா, முதல்வர் தன்னோட சொந்தப் பணம் அல்லது கட்சிப் பணத்தில் வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, மக்கள் பணத்தை இப்படியா வீணடிக்கிறது?
வெயிலிலும் மழையிலும் கிடந்து விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்ற நெல்லைப் பாதுகாக்க குடோன்கள் இல்லை. மழையில் பாதிக்கப்படும் நெல்லை காய வைக்க ‘டிரையர்’ வசதிகள் இல்லை. இதையெல்லாம் கேட்டா, ‘அரசு கஜானாவில் பணம் இல்லை. ஏற்கெனவே ஆட்சி செய்த தி.மு.க-காரங்க மொத்தமா ‘அபேஸ்’ பண்ணிட்டுப் போயிட்டாங்க’னு முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கார் வாங்குறதுக்கு விரயப்படுத்தும் 150 கோடி ரூபாய் பணத்தில், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 10 தடுப்பணைகள் கட்டினால் விவசாயிகள் பயன் அடைவாங்க. ஏரி, குளங்களைத் தூர் வாரினால் மழைநீரைச் சேமிச்சு, பாசனத்துக்கு பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டமும் உயரும்” என்று ஆதங்கப்பட்டார், வாத்தியார்.
“விவசாயிகள் எவ்வளவு சீரழிஞ்சாலும் ஆட்சியாளர்கள் அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம் கூட கவலையே பட மாட்டாங்க” என்று வேதனையுடன் சொன்ன ஏரோட்டி, அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.
“கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் மல்லிகைப்பூ சாகுபடி நடக்குது. தினந்தோறும் அறுவடையாகிற பூக்களை திருப்பத்தூர், சேலம், பெங்களுரூனு நிறைய ஊர்களுக்கு அனுப்புறாங்க. ‘சென்ட்’ தயாரிக்கிற தொழிற் சாலைகளுக்கும் மல்லிகைப் பூவை கொள்முதல் பண்றாங்க. ரெண்டு, மூணு வாரமா புழுக்கள் தாக்கு தலால்பூக்களின் தரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அதைக் காரணம் காட்டி, வியாபாரிகள் கொள்முதல் விலையை ரொம்பவும் குறைச்சிட்டாங்களாம். அதனால், விரக்தியடைஞ்ச பூ விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றில் மூட்டை மூட்டையா பூக்களைக் கொட்டியிருக் காங்க. கிட்டத்தட்ட 1,500 கிலோ பூக்களைக் கொட்டினதா சொல்றாங்க” என்றார், ஏரோட்டி.
அடுத்த செய்திக்குத் தாவிய காய்கறி, “காட்டுப்பன்றி, மான், மயில் மாதிரியான வன விலங்குகளால்தான் இது வரைக்கும் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டுக்கிட்டு இருந்துச்சு. இப்ப புதுசா ஒரு பறவையால் பிரச்னை வந்திருக்கு.
தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கிற தென்னங்குடி, தென்பரம்பூர், வெள்ளாம் பெரம்பூர், பனவெளி, அல்லூர், அம்மன் பேட்டை, நாகத்தி உள்ளிட்ட கிராமங்களில் இறவைப் பாசனத்தில் குறுவை நெல் சாகுபடி செஞ்சிருக்காங்க, விவசாயிகள். இந்த நிலையில், நெல் வயல்களில் ஒரு புது விதமான பறவைகள் கூட்டமாக வந்து நெற்பயிர்களைப் பிடுங்கி, தண்டுகளைத் தின்று சேதப் படுத்தியிருக்கு. அதிர்ச்சி அடைஞ்ச விவசாயிகள், இதுவரைக்கும் பார்க்காத பறவைகளாக இருக்குனு குழம்பிப் போயிருக்காங்க. வயது முதிர்ந்த விவசாயி களுக்குக்கூட அந்தப் பறவைகளைப் பத்தி தெரியலை. ஒலி பெருக்கி களைப் பயன்படுத்தி விரட்டினாலும், கொஞ்ச நேரத்திலேயே அந்த பறவைகள் வந்துடுதாம்.
கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் கடுமையா சேதம் அடைஞ்சிருக்கு. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் வனத்துறையினரின் உதவியை நாடியிருக்காங்க. வனத்துறையினர், அந்த கிராமங்களில் ஆய்வு பண்ணி, பயிர்களைச் சேதப்படுத்தும் பறவைகள் பத்தின தகவல் வெளி யிட்டிருக்காங்க.
‘ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட இந்திய மாநிலங்களில் அதிகமா வசிக்கக்கூடிய இந்தப் பறவைகளின் தமிழ்ப்பெயர், நீலத்தாழைக் கோழி. அங்கே இருக்கிற ஏரி, குளங்களில் இதைப் பார்க்கலாம். இப்ப, அங்க தண்ணீர் இல்லாததால், நெல்வயலில் தேங்கியுள்ள தண்ணீரைத் தேடி இங்கே வந்திருக்கு’னு வனத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்காங்க.
‘குறுவைச் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படலை. சீரான முறையில மின்சாரம் கிடைக்காததால, போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சுறதும் சவாலா இருக்கு. இவ்வளவு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் பாடுபட்டு பயிர்களை வளர்த்தோம். ஆனால், எதிர் பார்க்காத நிலையில், இப்படி பாதிப்பாகிடுச்சு. ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல நஷ்டம்.
இந்தப் பறவைகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியா நடவடிக்கை எடுக்கணும்’னு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வெச்சுருக்காங்க” என்றார் வருத்தத்துடன்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “தேர்தல் சமயத்தில் முதல்வர் விஜய் பேசின பேச்சுகள் என்னை மாதிரியான லட்சக் கணக்கான விவசாயிகளைப் புல்லரிக்க வச்சது. `விவசாயிகள் எல்லாம் ரொம்ப பாவம். வெயிலிலும் மழையிலும் கிடந்து கஷ்டப்படுறாங்க. ஆனால், அவங்க உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறதில்ல. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துட்டா, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்’னு நரம்பு தெறிக்க, நீட்டி முழக்கி வாக்குறுதி கொடுத்தார். இதை நம்பிதான் பெரும்பாலான விவசாயிகள் அவங்க கட்சிக்கு ஒட்டுப்போட்டு, அவரை முதல்வராக்கினாங்க.
இப்போ சன்னரக நெல்லுக்கு 2 ஆயிரத்து 750 ரூபாயும், மோட்டா ரக நெல்லுக்கு 2 ஆயிரத்து 600 ரூபாயும் அறிவிச்சிருக்கார், தமிழக முதலவர். இது மிகவும் குறைவான விலைனு நெல் விவசாயிகள் கொந்தளிக் கிறாங்க. ‘சட்டீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரத்து 100 ரூபாய் கொடுக்கிறாங்க. இந்த அளவுக்கு உயர்த்தி இருந்தால்கூட நாங்க ஓரளவுக்காவது திருப்தி அடைஞ்சிருப்போம்’னு நெல் விவசாயிகள் சொல்றாங்க. அதேபோல, ஒரு டன் கரும்புக்கும் 4 ஆயிரம் ரூபாய்தான் அறிவிச்சிருக்காங்க. அதனால் விவசாயிகள் ரொம்பவே ஏமாற்றத்தில் இருக்காங்க” என்றார்.
“எனக்குச் சமையல் வேலை இருக்கு, நான் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டே காய்கறி கூடையைத் தூக்க, அத்தோடு முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.
வாத்தியார் சொன்ன கொசுறு!
“பெரம்பலூர் மாவட்டம், கீழக் கணவாயில் இருக்கிற அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகரிச்சிருக்கு. அதனால், கல்லூரி முதல்வர், குரங்குகளைப் பிடிக்க துறையூரிலிருந்து ஜீவா, சின்னதுரைனு இரண்டு பேரை வரவழைச்சிருக்கார். அந்த ரெண்டு பேரும், கல்லூரி வளாகத்தில் திரிந்த ஒரு குரங்கைப் பிடிச்சு சித்ரவதை செஞ்சிருக்காங்க. அதை பாலிடெக்னிக் காவலாளி வீடியோ எடுத்து வெளியிட அது, சமூக வலைதளங்களில் வைரலாச்சு. உடனே, பெரம்பலூர் மாவட்ட வனத் துறையினர்,விசாரணை நடத்தி, ஜீவா, சின்னதுரை இரண்டு பேருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிச்சிருக்காங்க. வீடியோ எடுத்து வெளியிட்ட காவலாளிக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிச்சிருக்காங்க.”