📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 21, 2026 10:31 PM

பிரேசில் அணிக்கு முதல் வெற்றி: வெளியேறியது ஹைதி

பிரேசில் அணிக்கு முதல் வெற்றி: வெளியேறியது ஹைதி

பிலடெல்பியா: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பிரேசில் அணி 3-0 என, முதல் வெற்றியை பதிவு செய்தது.

மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் பிரேசில், ஹைதி அணிகள் மோதின. மொராக்கோ அணிக்கு எதிரான முதல் போட்டியை 'டிரா' செய்த பிரேசில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

பிரேசில் வீரர் ராபின்ஹா (12வது நிமிடம்) அடித்த கோல் 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. பின் பிரேசில் வீரர் மதேயுஸ் குன்ஹா (23) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய குன்ஹா (36), சகவீரர் வினிசியஸ் ஜூனியர் 'பாஸ்' செய்த பந்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் வலது கால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்த ராபின்ஹா வெளியேறினார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் வினிசியஸ் ஜூனியர் (45+3வது) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பிரேசிலின் என்டிரிக் (78) அடித்த கோல் 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. ஹைதி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது. 1974க்கு பின் உலக கோப்பையில் பங்கேற்ற ஹைதி, முதல் அணியாக 'நாக்-அவுட்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

மூன்றாவது வீரர்

உலக கோப்பை 'லெவன்' அணியில் முதல் முறையாக இடம் பிடித்த போட்டியில் 2 கோல் அடித்த 3வது பிரேசில் வீரரானார் குன்ஹா. இதற்கு முன், நெய்மர் (2014, எதிர்: குரோஷியா), ரிச்சார்லிசன் (2022, எதிர்: செர்பியா) சாதித்திருந்தனர்.

மீண்டும் முதலிடம்

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது. இதுவரை 116 போட்டியில், 241 கோல் அடித்துள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி அணி (239 கோல், 113 போட்டி) உள்ளது.

வருகிறார் நெய்மர்

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 34. பிரேசில் அணிக்காக 129 போட்டியில், 79 கோல் அடித்துள்ள இவர், வலது கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் முதலிரண்டு போட்டியில் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் நெய்மர், ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் (ஜூன் 24, மயாமி) விளையாட உள்ளார்.