பிரம்மிக்க வைக்கும் திருநங்கைகளின் வரலாற்று பங்களிப்பு; ஆச்சரியப்படுத்தும் மதுரையின் ஓவியக் கலைக்கூடம்
பிரம்மிக்க வைக்கும் திருநங்கைகளின் வரலாற்று பங்களிப்பு; ஆச்சரியப்படுத்தும் மதுரையின் ஓவியக் கலைக்கூடம்
திருநங்கைகளுக்கான ஓவியக் கலைக்கூடம் இந்தியாவிலேயே முதன்முறை தமிழ்நாட்டில் தான் நடத்தப்படுவதாக திருநங்கை / திருநம்பிகள் ஆய்வு மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மானு தெரிவிக்கிறார்.
Published : June 20, 2026 at 8:20 PM IST
-BY இரா.சிவக்குமார்
கல்வி முதல் தங்களுக்கான ஒவ்வொரு உரிமைகளையும் அடைய திருநங்கைகள் நீண்ட மற்றும் கடினமான போராட்டங்களை கடந்துதான் வந்துள்ளனர் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.
திருநங்கைகள் குறித்த பார்வை பொதுத்தளத்தில் மாறியிருந்தாலும், சமூக நீரோட்டத்தில் அவர்களுக்கான பங்களிப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது. ஆனாலும், தங்களை நிலைநிறுத்தி கொள்வதற்கான அவர்களின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஏன், 'மூன்றாம் பாலினத்தவர்' என்ற அரசின் அங்கீகாரத்தை பெற்ற பின்னரும், அவர்களுக்கான சமூக உரிமைகளை நோக்கிய நீண்ட நெடிய பயணம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
திருநங்கையர் மக்கள் தொகை
கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் திருநங்கை மற்றும் திருநம்பியர் உள்ளதாக கூறப்பட்டாலும், இந்த எண்ணிக்கை பல மடங்கு இருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மேலும், தங்களைக் குறித்து பொதுத்தளத்தில் வெளிப்படையாக பதிவுசெய்து கொள்ள முடியாத மனம் மற்றும் சமூகத்தடைகள் அதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் உள்ளதாக அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
வரலாற்று பங்களிப்பை விளக்கும் ஓவிய கலைக்கூடம்
இந்நிலையில், மதுரையில் உள்ள திருநங்கை / திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையம், அண்மையில் தங்களது வளாகத்திலேயே திருநங்கைகள் குறித்த ஓவிய கலைக்கூடம் ஒன்றை திறந்துள்ளது. இதன் நிறுவனர் ப்ரியா பாபு திருநங்கைகளின் உரிமைகளுக்காகவும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக திருநங்கைகளின் வரலாற்று பாத்திரத்தை வெளிக்கொணரும் வகையில், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அவர்களை குறிக்கும் பாடல், குறிப்புகள், பங்களிப்புகள் ஆகியவற்றை தொகுத்து இந்த ஓவியக் கலைக்கூடத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதை காண்பதற்காக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் ஓவியக் கலைக்கூடத்திற்கு புறப்பட்டோம். அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், காட்சிகள் அனைத்து மனதை லயிக்க செய்தது.
திருநங்கையரின் கடவுள் முதல் கலை வரை
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள் குறித்து பாடப்படும் பாடல்கள், பிரிட்டிஷார், மகாராஷ்டிரா அரசாட்சியில் திருநங்கைகள் நிலை, குற்றப்பழங்குடிகள் சட்டத்தில் அவர்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள்? உலகிலேயே முதல்முதலாக காகிதத்தை கண்டுபிடித்த திருநங்கை போன்றவை குறித்தெல்லாம் இங்கே ஓவிய வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவர்களுக்கான கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. திருநங்கைகளின் வழிபாட்டு கடவுள்கள், பேடிக்கூத்து போன்ற கலைகள், அவர்களால் நிகழ்த்தப்பட்ட நாட்டுப்புறக்கலை வடிவங்கள் என அனைத்தையும் தொகுத்து காட்சிப்படுத்தியுள்ளோம்.
வரலாறு முக்கியம்
திருநங்கைகளின் ஆணி வேர் என்பது அவர்களின் வரலாறுதான். அதனை மூன்றாம் பாலினத்தவரிடமும், பொதுமக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த ஓவியக் கலைக்கூடத்தின் நோக்கம். எந்த சமூகம் தனது வரலாற்றை பாதுகாக்கத் தவறுகிறதோ அது அழிந்து போய்விடும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று.
என்னதான் நவீன சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும் அவரவருக்கென்று இருக்கின்ற வரலாற்றுத் தொடர்ச்சியை போலவே திருநங்கைகளுக்கும் உண்டு. அவற்றையெல்லாம் பொதுத்தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். இங்கு நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். பார்வையிடும் அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்" என்கிறார் ப்ரியா பாபு.
திருநங்கைகள் தற்போது உருவானவர்கள் அல்ல
மேலும் அவர் கூறுகையில், "தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்தான். ஆனால் அந்நூல் திருநங்கைகள் குறித்து பேசுகிறது என்பதே பலருக்கு தெரியாத தகவல். நவீன இலக்கியங்கள், இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களில் திருநங்கைகள் குறித்து உள்ள அனைத்தையும் இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். இங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் அரசனின் அந்தப்புரத்தில் ராணிகளுக்கு உதவியாக திருநங்கைகள் இருந்த செய்திகள் எல்லாம் உள்ளன. சீவகசிந்தாமணியில் சீவகனுடைய காதலியின் தோழியாக வீணாபதி என்ற திருநங்கை இருந்தார் என்ற செய்தியும் இங்கு உள்ளது. மேலும், பல இலக்கியங்களில் திருநங்கைகள் போர்களில்கூட பங்கெடுத்துள்ளனர். இதனடிப்படையில் திருநங்கைகள் யாரும் இப்போது உருவானவர்கள் இல்லை. மனித நாகரிகத்தின் தொடக்கம் முதலே அவர்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றுக் காலத்திலிருந்தே நமக்கான தொடர்ச்சி இருக்கிறது என்பதே அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
'எல்லம்மா' வழிபாடு
இங்குள்ள ஓவியங்கள் அனைத்தையும் சுதைச் சிற்பமாக்கி பெரிய அளவில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது தனது கனவாக உள்ளது என்று கூறும் ப்ரியா பாபு, “அரவான், இந்தியா முழுவதும் திருநங்கைகளின் கடவுளாக இருக்கக்கூடிய பகுஜராஜ் மாதா, அதேபோன்று எல்லம்மா வழிபாட்டில், எவ்வாறு எல்லம்மாவை தூக்கிச் செல்வார்களோ அதை ஒட்டு மொத்தமாக சிற்பமாக வடித்துள்ளோம். எல்லம்மா வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சக்கி என்ற இசைக்கருவியையும் சிற்பமாக உருவாக்கியுள்ளோம். அதேபோன்று திருநங்கைகள் பயன்படுத்தக்கூடிய புழங்கு பொருட்களையும் சிற்பங்களாக மாற்றி காட்சிப்படுத்த உள்ளோம்” என்கிறார் பெருமிதத்துடன்.
அகநானூறு, சிலப்பதிகாரம், தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, நீலகேசி போன்றவற்றில் திருநங்கைகள் குறிப்பு, பெண்ணாக உருவெடுத்த சிவபெருமான் கோபேஷ்வர் மகாதேவ், மோகினி அவதாரம் எடுத்த திருமால், திருநங்கையாக உருவெடுத்த எமன், பேடிக்கூத்து என்ற திருநங்கையர் ஆடல் வகை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் அரவான் வழிபாடு, முகலாய அரண்மனைகளில் பணியாற்றிய திருநங்கைகள், மத்திய பிரதேச மாநிலத்தில் திருநங்கைகளால் நடத்தப்படும் பஜாரியா திருவிழா.
நவீன தமிழ் இலக்கியங்களில் முதன்முதலாக திருநங்கைகள் குறித்து வாடாமல்லி எனும் புதினத்தில் பதிவு செய்த எழுத்தாளர் சு.சமுத்திரம், பைபிளில் திருநங்கைகள், பெண் உருவத்தில் விநாயகர், சிலப்பதிகார மதுராபதி தெய்வம் என இந்த கலைக்கூடத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்களின் லிஸ்ட் நீள்கிறது.
வாழ்க்கையே போராட்டம்
இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ள மானு கூறுகையில், "கி.மு-வுக்கு முன்பிருந்தே திருநங்கைகள் குறித்த பதிவுகள் இங்கே உள்ளன. வரலாற்றில் திருநங்கைகளும், திருநம்பிகளும் எவ்வாறு இருந்தார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும்போது தன்னம்பிக்கை உருவாகும். தமிழ்மொழியில்கூட எழுத்து இலக்கணத்தில் வல்லினம், மெல்லினம் என்பதோடு உள்ள இடையினம் திருநங்கைகளையே குறிக்கிறது. ஜோதிடம் மற்றும் வான சாஸ்திரத்தில் கோள்கள், நட்சத்திரங்களில் கூட மூன்றாம் பாலினம் உருவகப்படுத்தப் பட்டிருப்பதையும் இங்கே ஓவியமாக காட்சிப்படுத்தியுள்ளோம்.
திருநங்கைகள் ஒவ்வொரு விசயத்திலும் போராடி போராடித்தான் இதுவரை வெளியே வந்துள்ளனர். இந்த ஓவியக் கலைக்கூடம் இளம் திருநங்கை / திருநம்பியருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, அவர்கள் ஆய்வு மேற்கொள்ளவும், 3ஆம் பாலினத்தவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அனைவருக்கும் இது பேருதவியாக இருக்கும். திருநங்கைகளுக்கான இந்த கலைக்கூடம் இந்தியாவிலேயே முதன்முறை தமிழ்நாட்டில் தான் நடத்தப்படுகிறது" என்றார்.
அதிகாரத்தை கொடுத்தவர்கள் தமிழர்கள்
இந்த கலைக்கூடத்தை பார்வையிடுவதற்காக திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர்கள் வந்திருந்தனர். இதுதொடர்பாக, கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜான்சிராணி கூறுகையில், “திருநங்கைகள் குறித்த பாலின பார்வையில் தற்போதைய காலத்தில் நல்ல மாற்றம் கண்டுள்ளது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சமூகம் நம்மோடு ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்துள்ளது. அதற்கான குறிப்புகள் அனைத்தும் உள்ளன.
ஆண்கள் பெண்களாக மாறுவதை பேடி என்றும், பெண்கள் ஆண்களாக மாறுவதை அலி என்றும் வகைப்படுத்தி அழைத்துள்ளனர். அரசனின் அந்தபுரத்தில் பாதுகாவலர்களாக பணிபுரிந்துள்ளனர். அவை அனைத்தையும் ஓவியமாக சிறப்பாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெறுமனே ஓவியம் மட்டுமின்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறிப்பிடும் அந்த பாடல்களையும் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய 11 வகையான ஆடல் கூத்துகளில் பேடிக்கூத்தும் ஒன்று. பழங்காலத்திலேயே திருநங்கைகளுக்கான அதிகாரத்தை தமிழர்கள் கொடுத்துள்ளனர் என்பது தான் இதன்மூலம் உணர வேண்டிய செய்தி. தமிழ் எழுத்து இலக்கணத்தையே மூன்று பாலினமாக பிரித்துக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கலைக்கூடத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
நன்னம்பிக்கை முனை
பொது சமூகத்தால் பல காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த மூன்றாம் பாலினத்தவர், தங்களது வரலாற்று வேர்களை அறிவதன் மூலம் புதிய உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அவர்கள் பெறமுடியும். அதற்கு இதுபோன்ற ஓவியக் கலைக்கூடங்கள் பெரும் பங்காற்றும் என நம்பலாம். சுமார் 2000 ஆண்டுகால வரலாற்று தொடர்ச்சியை காட்சிப்படுத்தியுள்ள இந்த ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ.. நிச்சயம் மூன்றாம் பாலினத்தவருக்கு நம்பிக்கையூட்டும் என்பதில் ஐயமில்லை.