பிறப்பு
புதுடில்லி: லோக்சபாவில், 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா - 2026' எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி இன்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய பார்லி., மழைக்கால கூட்டத் தொடர், வரும் 13ம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத் தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டத்தின்போது, மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பார்லி.,யை முடக்கி வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) லோக்சபா கூடியதும், 'பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா 2026' விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கம்போல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.இதனால், லோக்சபா மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போதும், மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி, சபையின் மையப் பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவிய சூழலில், விவாதம் இல்லாமல் 'பிறப்பு மற்றும் இறப்பு திருத்த மசோதா 2026' குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் இதே விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், சபை நடவடிக்கை முடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 3ம் தேதி வரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
* கடந்த 1996ம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர இம்மசோதா வழி வகை செய்கிறது
* பிறப்பு அல்லது இறப்பு நடந்து இரு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பதிவு செய்யப்பட நேர்ந்தால், முதல்நிலை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவு கட்டாயம் பெறப்பட வேண்டும்
* ஓராண்டு முதல் இரு ஆண்டுகள் வரையிலான தாமத பதிவுகளுக்கு மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் அனுமதி பெறும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்
* லோக்சபாவில் நிறைவேறிய இம்மசோதா அடுத்தக்கட்டமாக ராஜ்யசபாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.