`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்'
`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்' - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்; பின்னணி என்ன?
பிறப்பு - இறப்புப் பதிவு மசோதா 2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும் முறையைக் கடினமாக்கும் வகையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026 கடந்த 29-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஜூலை 20 அன்று வினாத்தாள் கசிவு குறித்த விவாதத்தின்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில், "1969-ம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் (கடைசியாக 2023-இல் திருத்தப்பட்டது) பிரிவு 13(3)-ல் மாற்றங்களை முன்மொழிவதே இந்தப் புதிய மசோதாவின் மையப் பொருளாகும்.
காலதாமதமாகச் செய்யப்படும் பதிவுகளுக்கான விதிமுறைகளை மிகவும் கடுமையானதாக மாற்றுவதன் மூலம், பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளைப் பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்வதைத் தவிர்த்து, உரிய காலத்தில் உடனடியாகப் பதிவு செய்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்'' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேல் காலதாமதமானால், அது 13 மாதங்களாக இருந்தாலும் சரி அல்லது 13 ஆண்டுகளாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அல்லது அதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதாவது, நிகழ்வு நடந்து 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய விண்ணப்பித்தால், பழைய நடைமுறையே தொடரும்.
அதாவது, சம்பந்தப்பட்ட பகுதிக்கான மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அல்லது நிர்வாக நடுவர் அமைப்பின் சரிபார்ப்பிற்குப் பிறகும், உரிய கட்டணம் செலுத்திய பிறகும் பதிவு செய்ய உத்தரவிடப்படும். ஆனால், பிறப்பு அல்லது இறப்பு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலுவையில் உள்ள பதிவுகளுக்குத் தான் மிகக் கடுமையான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இனி இத்தகைய பதிவுகளுக்கு 'முதல் வகுப்பு நீதித்துறை நடுவர்' மட்டுமே விசாரணை நடத்தி உத்தரவிட முடியும். இதன் மூலம், மிகக் தாமதமான பதிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் நிர்வாக அமைப்பிடமிருந்து நீதித்துறை அதிகாரியின் கைக்கு மாறும் என்பது இந்த மசோதா மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது