📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 03:34 PM

பிரதமர் வேட்பாளராகிறாரா விஜய்? ஆர்.பி.உதயகுமார் கிளப்பிய புதிய சர்ச்சை!

பிரதமர் வேட்பாளராகிறாரா விஜய்? ஆர்.பி.உதயகுமார் கிளப்பிய புதிய சர்ச்சை!

இந்தியாவில் வருகின்ற 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் 2029-ல் நடக்கவுள்ள தேர்தல் அரசியல் களத்தையே முற்றிலுமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் உருவாகியுள்ள புதிய கட்சியே இதற்கு முக்கிய காரணம்.

திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இன்றே தவெக கூட்டணியில் இணைந்துள்ளன. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ், தவெக-வுடன் இணைந்திருப்பது அரசியல் வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பலனாக கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் 2029-ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முயற்சி நடப்பதாக அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளை தூக்கி எறிந்தது தான் தவெக-வின் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக நிலைத்தன்மையுடன் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் திமுக-வை கைவிட்டன. மறுபுறம் அதிமுக-வை அக்கட்சி எம்எல்ஏ-க்களும், முக்கிய நிர்வாகிகளும் கைவிட்டனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் பல அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமாக்க முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சமூக வலைதளங்களில் நரேட்டிவை உருவாக்கி முதல்வர் விஜய் செய்யாததையும், செய்ததாக இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. தொடர்ந்து ஃபேக் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பரப்பபட்டு வருகின்றன.

இதனைப் பார்க்கும் போது 2029-ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. போலியான ரீல்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவது குறித்து மத்திய அரசும், உளவுத்துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட போவதில்லை என்பதை விஜய் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் ஒன்றே எங்களது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் அன்று சொன்னது போலவே, இன்று சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்து வரவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கவனம் செலுத்த உள்ளது. அதற்குப் பிறகே 2029 நாடாளுமன்ற தேர்தலில் தவெக கவனம் செலுத்தும். ஏற்கனவே புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வரும் நிலையில், கேரளாவில் கட்சியை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தவெக-வுடன் காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி சேர்ந்த நிலையில் விசிக மட்டும் கூட்டணி குறித்து எவ்வித நிலைப்பாட்டையும் முழுமையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் பாஜக-வை எதிர்க்க வேண்டுமெனில் திமுக-வும், தவெக-வும் கூட்டணி சேர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2029 நாடாளுமன்ற தேர்தலின் போது தான் திமுக - தவெக ஒரே அணியில் இடம் பிடிக்குமா அல்லது இல்லையா என்பது தெரிய வரும்