பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்ட கூட்டணியில் இந்திய கம்யூ. இல்லை: மு.வீரபாண்டியன்
சென்னை: பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வலைதள பதிவில் “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்” தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை. அத்தகைய, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது.
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.