📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 13, 2026 10:04 AM

பகலை இரவாக்கிய முழுச் சூரிய கிரகணம்

பகலை இரவாக்கிய முழுச் சூரிய கிரகணம்

மட்ரிட்: ஐரோப்பாவில் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை (ஆகஸ்ட் 12) ஏற்பட்ட முழுச் சூரிய கிரகணத்தைக் காண கடற்கரைகளிலும் திறந்தவெளிகளிலும் மக்கள் திரண்டனர்.

பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த அரிய நிகழ்வின்போது, வானத்தில் சூரியன் ஒரு கரிய வட்டமாகவும் அதனைச் சுற்றி ஒளிரும் சுடர்மண்டலமாகவும் (corona) காட்சியளித்தது.

இந்த முழுமையான கிரகணத்தைக் காணப் பலர் அதிகக் கட்டணம் செலுத்தி விடுதிகளில் தங்கினர். ஸ்பெயின் நாட்டின் காலியான நகரங்கள் மக்களால் நிறைந்தன. சில இடங்களில் மேகமூட்டம் காரணமாகக் கிரகணத்தைக் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஐஸ்லாந்தில் இருள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியபோது பறவைகள் கத்தின. ஸ்பெயினின் கேஸ்ட்ரிலோ டி லா ரெய்னா பகுதியில் கூடி இருந்த மக்கள் கிரகணத்தின் தொடக்கத்தைக் கண்டு ஆரவாரம் செய்தனர். லண்டனில் பகுதியளவு கிரகணத்தைக் காண மக்கள் பூங்காக்களில் கூடினர்.

‘ஒடிசி’ போன்ற பழங்காலப் புனைவுகள் முதலே கிரகணங்கள் மனிதர்களின் கற்பனையை ஈர்த்து வருகின்றன.

கிரகணத்தின்போது வெளிச்சமும் வெப்பமும் குறைந்தன. சந்திரன் சூரியனை மறைத்த முழுக் கிரகணம் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது.

ஐஸ்லாந்தின் ஹெல்லிசந்தூர் பகுதியில் மேகமூட்டம் மற்றும் மழை இருந்தாலும், மாலை 5.45 மணியளவில் மேகங்கள் விலகி, சூரியனின் மெல்லிய ஒளிக்கீற்று தெரிந்தது.

ஸ்பெயினின் இபிசா தீவில் மேகம் மறைத்த சூரியன் மீண்டும் வெளிப்பட்டபோது, மக்கள் தங்கள் கைப்பேசிகளில் அதைப் படம்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.