📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 03, 2026 05:00 PM

பனிப்பாறை ஏரிகளை வற்றச் செய்து அபாயத்தைக் குறைக்க நேப்பாளம் திட்டம்

பனிப்பாறை ஏரிகளை வற்றச் செய்து அபாயத்தைக் குறைக்க நேப்பாளம் திட்டம்

காத்மாண்டு: வெள்ளப்பெருக்கின் அபாயத்தைக் குறைப்பதற்காக மலைகளில் அமைந்துள்ள நான்கு பனிப்பாறை ஏரிகளின் நீரை வெளியேற்றும் சவாலான முயற்சியை நேப்பாள அரசு மேற்கொள்ளும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓர் இயற்கைப் பேரிடர் நிகழாமல் தடுப்பதற்கான அந்த முயற்சி இந்த நிதியாண்டிலேயே தொடங்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நேப்பாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த அளவுக்கு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. காணாமற்போன 5,000க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் இன்னமும் தேடி வருகின்றனர்.

எனவே, அடுத்தகட்ட ஆபத்துத் தணிப்பு முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக புதிய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசாங்க ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் சுபாஷ் துலாதர் தெரிவித்தார்.

“பனிப்பாறை ஏரிகளின் அணைகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதும் அதன் மூலம் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கின் அபாயத்தைக் குறைப்பதுமே எங்களது முதன்மை நோக்கம்,” என்றார் அவர்.

கால்வாய்கள் மூலம் இந்த நீர் அருகில் உள்ள ஆறுகளில் சீரான முறையில் திருப்பி விடப்படும் என்று கூறிய அவர், அதிக உயரத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் மற்றும் திடீர் வெள்ள அபாயங்களையும் அவர் கடினமான சவால்கள் என்று குறிப்பிட்டார்.

மத்திய, கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள துலாகி, லோவர் பரூன், லும்டிங் சோ, ஹோங்கு II (Hongu II) ஆகிய ஏரிகளில் வடிவமைப்புப் பணிகளும் விரிவான ஆய்வுகளும் தொடங்கப்படும் என்று சில அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2027 ஜூலை நடுப்பகுதி வரை நீடிக்கும் இந்த நிதியாண்டில் அந்தப் பணிகள் தொடங்கப்படும் என்றனர் அவர்கள். அதற்கு U$50 மில்லியன் (S$64 மில்லியன்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 4,050 மீட்டர் முதல் 5,483 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள ஏரிகள், நேப்பாளத்தில் அபாயம் அதிகமுள்ள பகுதிகள் என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த மலைத்தொடர் மேம்பாட்டிற்கான அனைத்துலக நிலையம் ஆகியவை 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.