பணியிட மாறுதலுக்கு லஞ்சம் கேட்கின்றனர் தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் மீது புகார்
சென்னை: ''தமிழ் வளர்ச்சி துறையில், பணியிட மாறுதல் பெற, உயர் அதிகாரிகள் மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்,'' என, பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் புனிதா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் கணவர் தலைமை காவலராக பணியாற்றி உயிரிழந்ததை தொடர்ந்து, 2012 முதல் தமிழ் வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளராக, கருணை அடிப்படையில் பணியாற்றி வருகிறேன்.
தொடர்ந்து, 13 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 2024ல் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.
வயது மூப்பு, உடல்நல பிரச்னை, மகள் தனியாக கொளத்துாரில் வசித்து வருவது உள்ளிட்ட காரணங்களால், மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் வழங்கக் கோரி, இரண்டு ஆண்டுகளாக, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் முதல், இயக்குநர் வரை, பல முறை மனு அளித்துள்ளேன்.
இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச், 10ம் தேதி பணியிட மாறுதல் கோரி, துணை இயக்குநர் சத்தியபிரியாவை சந்தித்தேன். அவர் என் மகளை தனியாக அழைத்து, 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, 'பணம் கொடுக்காமல் பணியிட மாறுதல் பெற முடியாது; குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்' என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகனை இரண்டு முறை சந்தித்து மனு அளித்து உள்ளேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக, முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசி எண்களில் அழைத்து மிரட்டுகின்றனர். இந்த விவகாரத்தில், முதல்வர் விஜய் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புனிதா கூறினார்.